×

வடபழனி முருகன் கோயிலில் சூரிய சக்தி மின் உற்பத்தி: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை வடபழனி முருகன் கோயிலில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 91.25 கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின் தகடு நிலையத்தை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது:

கோயில் முழுவதும் சோலார் மின்சாரம் பயன்படுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சோலார் மின்சக்தியை முழுமையாக பயன்படுத்தும் முதல் கோயிலாக வடபழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் சமயம் சேமிப்பாகும் மின்சாரம் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு கொடுக்கப்படும். இதன் மூலம் பெரும் தொகை சேமிக்கப்படும். தொடர்ச்சியாக அனைத்து கோயில்களிலும் சோலார் பேனல்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் பழனி முருகன் கோயிலிற்கு அதிக கூட்டம் வருவதால், மலை ஏறுவதற்கு ரோப் கார் உள்ளிட்டவைகளில் பயணம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

முதியவர்களுக்கு தனி வரிசை இருந்தாலும், விடுமுறை, மற்றும் விழா நாட்களில் அதிக கூட்டம் வருகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வரிசையில் நிற்பதை தவிர்க்க கூடுதலாக புதிய ரோப் கார் லைன் ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தி.நகர் எம்எல்ஏ கருணாநிதி, மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post வடபழனி முருகன் கோயிலில் சூரிய சக்தி மின் உற்பத்தி: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Segarbabu ,Vadapalani Murugan Temple ,Chennai ,Sekhar Babu ,Sekarbabu ,
× RELATED வைகாசி விசாக திருவிழாவையொட்டி சென்னை...