×

ஷிவ் நாடார் பல்கலை.யில் மாணவியை சுட்டு கொன்று மாணவன் தற்கொலை: தொல்லை தந்தது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது விசாரணையில் அம்பலம்

நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் மாணவியை சுட்டுகொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவரை பற்றி மாணவி புகார் அளித்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. உ.பி மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு சமூகவியல் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் சினேகா சவுராசியா(21). அதே வகுப்பில் படித்து வந்தவர் அனுஜ் சிங்(21). இந்த நிலையில் மாணவி சினேகாவை பல்கலை. வளாகத்தில் உள்ள கேண்டீன் அருகே கடந்த வியாழக்கிழமை சந்தித்த அனுஜ் சிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைநத அனுஜ் சிங் தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சினேகாவை சரமாரியாக சுட்டுக் கொன்றார்.

பின்னர் சவகாசமாக அங்கிருந்து சென்ற அவர், விடுதியில் உள்ள தனது அறைக்கு சென்று அதே துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டும் சினேகா கொல்லப்பட்ட இடத்துக்கு யாருமே வரவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்த சினேகாவை பார்த்த மாணவர்கள் சிலர், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சினேகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்திலும துப்பாக்கி கலாச்சாரம் வளர்ந்துள்ளது, அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அனுஜ் துப்பாக்கியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றி திரிய நிர்வாகம் அனுமதித்தது ஏன்? என்று சினேகாவின் பெற்றோர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவன் அனுஜ் தொல்லை தருவது குறித்து மாணவி சினேகா பல்கலை நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்கள் அலட்சியப்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஷிவ் நாடார் பல்கலை.யின் நிதி நடவடிக்கைகளுக்கான செயல் இயக்குநர் ராஜா நடராஜன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “மாணவி சினேகா அதே பேட்ஜில் சோசியாலஜி 3ம் ஆண்டு படிக்கும் மாணவன் அனுஜ் பற்றி தனிப்பட்ட முறையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரண்டு முறை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இது போன்ற பிரச்சனைகள் மாணவர்களிடையே சகஜம் என்பதால் அதைப் பற்றி ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரம், அவர்கள் இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது,” என்று கூறியுள்ளார்.

நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தால் இரண்டு மாணவர்களின் உயிர் பறி போனதாக மாணவர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாணவன் குறித்து மாணவி புகார் அளித்த போதே ஆலோசனையுடன் நிர்வாகம் நடவடிக்கையும் எடுத்திருந்தால் இந்த உயிர் பலிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் மாணவிகள் அளிக்கும் புகார்கள் இது போன்று புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் மட்டுமின்றி அது ஒட்டு மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் சூழல் ஏற்படுவதை பல்கலை நிர்வாகம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post ஷிவ் நாடார் பல்கலை.யில் மாணவியை சுட்டு கொன்று மாணவன் தற்கொலை: தொல்லை தந்தது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Shiv Nadar University ,Noida ,Greater Noida ,dinakaran ,
× RELATED லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ்...