×

17.37 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு: 12 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்வது டெல்டா பாசனப்பகுதிகள். டெல்டா பாசனத்திற்கு நீர்வார்க்கும் மேட்டூர் அணை சேலத்தில் உள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரால், மொத்தமாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதில் காவிரி டெல்டா பகுதிகளின் குறுவை சாகுபடிக்காக, ஆண்டு தோறும் ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை என்ற மனக்குமுறல் விவசாயிகளிடம் இருந்தது. கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும், வழக்கம் போல் ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இது விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, கடந்தாண்டு (2022) ஜூன் 12ம்தேதிக்கு முன்பாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே மாதம் 20ம்தேதி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்கான நீரை திறந்துவிட்டார். மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல்முறையாக நிகழ்ந்தது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடப்பாண்டும் மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12ம்தேதி, டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகிறது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகும். இது நேற்று காலை நிலவரப்படி 103.81 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 69.868 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளவில் 74.75 சதவீதம் ஆகும். நீர்வரத்து விநாடிக்கு 924 கனஅடியாக உள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 1503 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. இதனால் வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12ம் தேதியே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

அதேநேரத்தில், கடந்தாண்டு இந்த தேதியில் இருந்த தண்ணீரை விட, தற்போது 6டிஎம்சி வரை குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த 3ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது,’ என்றனர். வழக்கமான நாளில் திறக்கப்படும் நீரால் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், ‘‘ஜூன் 12ம்தேதி முதல் 28ம்தேதிவரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 220நாட்களுக்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு, ஜூன் 12ம்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன் 12ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19வது முறையாக குறித்த நாளான ஜூன் 12ம்தேதி, நடப்பாண்டும் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றனர். வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘‘டெல்டா பாசனப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் குறுவை சாகுபடி செய்கின்றனர். கடந்தாண்டு 58,000 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 71,500 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 64,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 65,500 ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளது. அதேபோல் 4.36 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது,’ என்று ெதரிவித்தனர்.

* நீர் திறப்பும்… மின்சார உற்பத்தியும்…
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும் தண்ணீர் திறந்து விடப்படும் பொழுது அணை மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் கீழ் பகுதியில் 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

* டெல்டாவில் 71,500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது.

* ஜூன் 12ம்தேதி முதல் 28ம்தேதிவரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 220நாட்களுக்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.

* அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு, ஜூன் 12ம்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

* கடந்தாண்டு இந்த தேதியில் இருந்த தண்ணீரை விட 6 டிஎம்சி அடி குறைவாக உள்ளது.

The post 17.37 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு: 12 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Delta ,Tamil Nadu ,Saleam ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...