×

கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2000 நோட்டை வாங்கி கொள்வோம்: வியாபாரிகள் சங்கத்தினர் தகவல்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில், ரூ.2000 நோட்டை பொதுமக்களிடம் இருந்து வாங்கி கொள்வோம் என, வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவரும் காய்கறி, பூக்கள், பழங்கள் மற்றும் உணவுதானியங்கள் மார்க்கெட்டில் சுமார் 4,800 கடைகள் செயல்படுகிறது. தினமும் லட்சக்கணக்கில் பொதுமக்களும் வியாபாரிகளும் வந்து செல்வதால் இங்கு கோடிக்கணக்கில் பணப்புழக்கம் காணப்படுகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், இந்த நோட்டுகளை வைத்துள்ளவர்கள் வரும் செப்டம்பர் 30 தேதி வரை மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் பங்க், டாஸ்மாக் கடை, மால்கள், திரையரங்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரூ.2000 நோட்டுகளை வாங்க மறுத்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். கோயம்பேடு மார்க்கெட்டில் சில வியாபாரிகள் அதனை வாங்க மறுத்ததால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிப்புக்
குள்ளாகினர். இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் சென்னை புறநகர் சில்லறை வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிவிட்டு ரூ.2000 நோட்டுகளை கொடுத்தால் வாங்க வியாபாரிகள் மறுக்கின்றனர்.

மற்ற கடைகளில் சென்று சில்லரை கேட்டால் ரூ.2000 நோட்டுகளை கொண்டுவர வேண்டாம் என்று கூறுகின்றனர். இதனால் அவற்றை மாற்ற கடை, கடையாக அலைகின்றோம்.’’ என்றனர்.
இதுபற்றி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘ கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ரூ.2000 நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை அவற்றை மாற்ற கால அவகாசம் கொடுத்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், சென்னை புறநகர் சில்லறை வியாபாரிகள் ரூ.2000 நோட்டுகளை கொண்டு வந்தால் தாராளமாக வாங்கி கொள்வோம். இங்கு ரூ.2000 நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுத்துவருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம். ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததை வரவேற்கிறோம்.’’ என்றார்.கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் சில வியாபாரிகள் ரூ.2000 நோட்டுகளை வாங்க மறுத்ததால், பொதுமக்கள் அவற்றை மாற்றுவதற்கு மிகவும் அவதிப்பட்டதாக கேள்விப்பட்டோம். மார்க்கெட்டில் ரூ.2000 நோட்டுகளை வாங்கி கொள்வோம். வதந்திகளை நம்பவேண்டாம்.’’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2000 நோட்டை வாங்கி கொள்வோம்: வியாபாரிகள் சங்கத்தினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Coimbadu Market ,Dealers and ,Congregations Information ,Chennai ,Coimbade Market ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி...