×

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு; பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கவுன்சலிங் ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை நடக்க இருந்த பணியிட மாறுதல் கவுன்சலிங், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின்கீழ் இயங்கும், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நாளை தொடங்கும் என்று ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதேபோல முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கடந்த வாரம் தொடங்க இருந்த நிலையில் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்த காரணத்தால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் 15ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி 15ம் தேதிக்கு பிறகு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கவுன்சலில் தொடங்க பள்ளிக் கல்வி ஏற்பாடு செய்தது.

இதற்கிடையே, பள்ளிக் கல்வித்துறையின் ஆணையராக இருந்த நந்தகுமார் திடீரென மாற்றப்பட்டார். ஆணையர் பணியிடத்தில் இன்னும் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. மேலும், அந்த பணியிடத்தில் முன்பு இருந்தபடி இயக்குநரை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இயக்குநர் பணி நியமனம் செய்த பிறகு பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங் நடத்தலாம் என்று ஆசிரியர்கள் தரப்பில் பள்ளிக் கல்விஅமைச்சர் அன்பில் மகேஷபொய்யாமொழியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் தியாகராஜன் கூறியதாவது:

பள்ளிக் கல்வித்துறையில் தற்போது ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடந்து வருகிறது. அட்டவணைப் படி, நாளை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சலிங் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கடந்த 1.8.2022 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதனால் பல ஆயிரம் ஆசிரியர்கள் பணி நிரவலில் வேறு பள்ளிகளுக்கு செல்லும் சூழ்நிலை இருந்தது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில், கடந்த கால நிலவரப்படி பணி நிரவல் செய்வது ஏற்புடையது அல்ல, இந்த ஆண்டில் நிலவரப்படியும் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த சீரிய நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வரும் சூழ்நிலையில், இந்த ஆண்டின் நிலவரப்படி பணி நிரவல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்ெபாய்யாமொழியை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் இந்த நியாயத்தன்மையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் இந்த ஆண்டின் நிலவரப்படி நடத்த முடிவு செய்து அறிவுரையும் வழங்கினார். அதன் பேரில் நாளை நடக்க இருந்த பணிநிரவல் கவுன்சலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்கள் தரப்பில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் தியாகராஜன் தெரிவித்தார்.

The post பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு; பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கவுன்சலிங் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu School Education Department ,School Education Department ,
× RELATED அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை