×

பணி மாறுதலுக்கு பிறகும் தீவிர களப்பணி தூத்துக்குடி கலெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடி,மே.21:பணி மாறுதல் உத்தரவு வந்த பின்னரும் தீவிர களப்பணியாற்றிவருவதையடுத்து, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக செயல்பட்டுவரும் செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக சென்னைக்கு பணியிட மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து தூத்துக்குடிக்கு புதிய கலெக்டராக, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ராகுல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 23ம்தேதி பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. அதுவரை செந்தில்ராஜ் கலெக்டராக தொடர்கிறார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக செந்தில்ராஜ், கடந்த 2020 நவம்பர் 15ம்தேதி பணியை தொடங்கினார். அன்றிலிருந்து தற்போது வரை அனைவரும் எளிதில் அணுகும் விதத்தில் இவரின் செயல்பாடு அமைந்தது. குறிப்பாக விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், பார்வையற்றோர், திருநங்கைகள் போன்றவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்து வந்தார்.
சமீபத்தில் சாத்தான்குளம் பகுதியில் பிளஸ்2 மாணவி ஒருவர் தெருவிளக்கில் படிப்பதையறிந்த அவர், அம்மாணவியின் வீட்டுக்கு ஒரேநாளில் மின் இணைப்பு வழங்க வழிசெய்தார். நாலாட்டின்புதூரில் மாற்றுத்திறனாளி தனது வீட்டுக்குச் செல்ல பாதை வசதி சரிவர இல்லை எனவும், தனது 3சக்கர வண்டி செல்ல பாதை அமைத்து தருமாறும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதனை உடனடியாக பரிசீலித்த கலெக்டர், அவரது வீட்டுக்கு செல்லும் பாதையை சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைக்க வழி ஏற்படுத்தினார்.

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் 52 பார்வையற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் மூலமாக ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதற்காக இடம் தேர்வு செய்து கொடுத்ததோடு, சிலரிடம் இலவசமாகவே இடத்தினை பெற்றுக் கொடுத்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதி கொடுப்பவர்களுக்கு தனி இடம் வசதி செய்து, மனு எழுதி கொடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலிக்க கூடாது என்றும் மாவட்ட நிர்வாகமே அதற்கான பணத்தை வழங்கும் என்று அறிவித்தார். இப்படி அனைவருக்கும் நண்பனாகவும், எளிதில் அணுக கூடியவராகவும் இருந்தார். இவரது மனிதநேயம், மனிதாபிமானத்தை வியந்து பாராட்டும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தற்போது மாறுதலாகி செல்லும் கலெக்டர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக பணிமாறுதல் உத்தரவு வந்தபின்னர் எந்த அதிகாரிகளும் பணி செய்வதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் மாறுதல் உத்தரவு வந்தபிறகும் நேற்று வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரது பணியை பார்த்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உப்பாற்று ஓடையில் மேம்பாட்டு பணிகள் ஸ்பிக்நகர், மே 21:தூத்துக்குடி கோரம்பள்ளம் உப்பாற்று ஓடையில் கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரைகள் உடைந்தது. இதில், மாவட்ட கலெக்டர் அலுவலகப் பகுதி, மறவன்மடம், அந்தோணியார்புரம். சுப்பிரமணியபுரம், பெரியநாயகிபுரம். திரு.வி.க நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரபட்டி, வீரநாயகத்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளை நகர் பகுதி குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டது.இதை தடுக்க ₹5 கோடியில், கோரம்பள்ளம் குளம் உபரிநீர் வெளியேறும் உப்பாற்று ஓடையில் சிறிய பாலங்கள், உள்வாங்கிகள் ஆகியவற்றை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பொது பணித்துறை (நீர் வளம்) செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் ரத்தினகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post பணி மாறுதலுக்கு பிறகும் தீவிர களப்பணி தூத்துக்குடி கலெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Collector ,Kalapani Thothukudi ,Thuthukudi ,Thoteukudi ,Senthilraji ,Tutukudi District ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...