×

போதிய நீர் இருப்பு உள்ளது; இந்தாண்டு மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்க வாய்ப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை: மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பதால் இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மேட்டூர் அணையை நம்பி உள்ளது. ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். அதேபோல் ஜனவரி 28ம் தேதி அணை மூடப்படும்.

மேட்டூர் அணையில் 90 அடி நீர் இருப்பு இருந்தாலே, ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும். பருவமழை பொய்த்தது, கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பு ஆகிய காரணங்களால், 2016ல் 20.9.2016, 2017ல் 2.10.2017, 2018ல் 19.7.2018, 2019ல் 13.8.2019 என மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டது. 2020ல் ஜூன் 12ல் திறக்கப்பட்டது. அதேபோல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 2021ல் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான தேதிக்கு முன்பு அதாவது மே மாதம் 24ம் தேதியே மேட்டூர் அணையை திறக்க உத்தரவிட்டார். மேலும்

தமிழக முதல்வரே மேட்டூர் அணையை திறந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வழி ஏற்படுத்தினார். இதையடுத்து கல்லணையில் இருந்து மே 27ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால், இலக்கை மிஞ்சி காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி 1.99 லட்சம் ெஹக்டேரில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலக்கை மிஞ்சி 2.17 லட்சம் ஹெக்டேரில் நடந்து முடிந்துள்ளது. இதேபோல் தாளடியில் 1.65 லட்சம் ஹெக்டேரில், பிற பயிர்கள் 30,000 ஹெக்டேர் என மொத்தம் 7.84 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலக்கை மிஞ்சி 7.88 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்த்ததை விட கூடுதலாக சாதனை மேற்கொள்ளப்பட்டதற்கு மே மாதம் இறுதியிலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது தான் காரணமாக அமைந்தது. இது கடந்த 50 ஆண்டுகளுக்கு பின் அடைந்த சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்டாவில் நெல் உற்பத்தி உயர்ந்ததுடன், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைத்தது.

அதேபோல் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 69.774 டி.எம்.சி. ஆகும். 1,503 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை வரும் ஜூன் 7ல் துவங்குகிறது. பருவ மழை அதிகளவில் பொழிந்தால்தான் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வந்து சேரும். அப்படி வந்து சேர 10 நாட்களுக்கு மேலாகும். அதன்பின்னர் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும் தற்போது நீர் இருப்பு 103 அடியாக இருப்பதால் ஜூன் 12ல் தான், அணை திறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடைேய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க டெல்டா மாவட்டங்களில் நீர்வளத்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள், 1068.45 கி.மீ நீளத்திற்கு ரூ.20.45 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு தற்போது 106 பணிகள் துவங்கப்பட்டு 127 இயந்திரங்கள் கொண்டு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஆண்டு தோறும் மேட்டூர் அணை திறப்பு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் மூத்த வேளாண் வல்லுநர் குழு ஜூன் 6ம் தேதிக்கு முன்னதாக மேட்டூர் அணையை திறந்தால் காவிரி டெல்டாவில் அமோக சாகுபடி இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளது. இதன்படி மேட்டூர் அணையில் வழக்கமான காலத்திற்கு முன்பாக திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த சூழ்நிலைகளை பார்க்கும் போது, அணை முன்கூட்டியே திறக்கவும் வாய்ப்புண்டு. அதேசமயம் கட்டாயம் ஜூன் 12ல் அணை திறக்கப்படுவது உறுதி. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து இதுவரை 26 முறை குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 11 முறை முன்கூட்டியும், 53 முறை தாமதமாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post போதிய நீர் இருப்பு உள்ளது; இந்தாண்டு மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்க வாய்ப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : India ,Mattur dam ,Delta ,Thanjana ,India Mattur Dam ,Joy ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...