×

குரும்பூர் அருகே கடம்பா மறுகால் ஓடை தடுப்பு சுவர் கட்டும் பணி அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

திருச்செந்தூர், மே 20: குரும்பூர் அருகே உள்ள கடம்பா மறுகால் ஓடையில் தடுப்பு சுவர் கட்டும் பணியை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் உள்ள கடம்பா குளத்தின் உபரிநீர் 200 அடி அகலத்தில் உள்ள மறுகால் ஓடை மூலம் சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஆக்கிரமிப்புகளால் 200 அடி அகலமுடைய ஓடை முழுவதும் சுருங்கி 30 அடியாக காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் பெய்த கனமழையால் கடம்பாகுளம் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. அப்போது ஆக்கிரமிப்புகளால் கரைகள் உடைந்து குடியிருப்புகளுக்குள்ளும், விவசாய நிலத்திலும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் மற்றும் கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து கடம்பாகுளம் மற்றும் நீர்வழி ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணிகள் கடந்த டிசம்பர் 15ம் தேதி குரும்பூர் அங்கமங்கலம் பகுதியில் துவங்கியது. இந்த பணிகளை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், ‘கடம்பாகுளம் மறுகால் முதல் கடல் வரை சுமார் 17 கி.மீ தொலைவில் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் உபரிநீர் செல்லக்கூடிய பகுதிகளில் பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். தற்போது அளவீடு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்துவதற்கும், ஓடையின் கரை பகுதியில் கல் அமைப்பதற்கும் ₹34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஓடையின் இரு பகுதியிலும் தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது.

தற்போது கடம்பா குளத்தில் மறுகால் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியில் இருந்த அரசு ஒப்பந்ததாரரிடம் மறுகால் ஓடை, பாலம் மற்றும் தடுப்பு சுவர் பணியை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது, யூனியன் சேர்மன் ஜனகர், திமுக ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளரும் மேலாத்தூர் பஞ்., தலைவருமான சதிஷ்குமார், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், குரும்பூர் நகர செயலாளர் பாலம் ராஜன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரி சங்கர், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், நாலுமாவடி பஞ்., துணைத்தலைவர் ராஜேஷ், மணத்தி கணேசன், அரசு ஒப்பந்ததாரர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குரும்பூர் அருகே கடம்பா மறுகால் ஓடை தடுப்பு சுவர் கட்டும் பணி அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Anitaradhakrishnan ,Kadamba stream ,Kurumpur ,Tiruchendur ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...