லாகூர்: தீவிரவாதிகளை வீட்டுக்குள் மறைத்து வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இம்ரான் கானின் வீட்டை போலீசார் நேற்று சோதனையிட்டனர். லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டில் 30 முதல் 40 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் மாகாண அரசாங்கம் தெரிவித்திருந்தது. தீவிரவாதிகளை 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து இம்ரான் வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கெடு முடிந்ததும் இம்ரான் கானின் வீட்டில் சோதனையிடுவதற்காக நேற்று நூற்றுக்கும் மேலான போலீசார் உள்ளே சென்றனர். இதுகுறித்து பஞ்சாப் மாகாண அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் விதமாக சோதனை நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. இம்ரான் வீட்டில் இருந்து தப்பி ஓடிய 14 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக போலீசார் கூறினர்.
* 3 வழக்குகளில் ஜாமீன்
இதனிடையே, லாகூரில் ராணுவ அதிகாரியின் வீடு மீது நடந்த தாக்குதல் உள்பட 3 வழக்குகள் இம்ரானுக்கு எதிராக போலீசார் பதிவு செய்திருந்தனர். தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த 3 வழக்குகளிலும் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
The post தீவிரவாதிகளை மறைத்து வைத்த விவகாரம் இம்ரான் கான் வீட்டில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.
