×

திருமங்கலம் அருகே கல்வெட்டு பொறிக்கப்பட்ட நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு: தம்பதிக்கு அமைக்கப்பட்டது

திருமங்கலம்: திருமங்கலம் அருகே, சாத்தங்குடி கிராமத்தில் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் அருகே, சாத்தங்குடி கிராமத்தில் பழமையான சிலை கல்வெட்டுடன் இருப்பதாக அக்கிராமத்தினை சேர்ந்த அரிச்சந்திரன் என்பவர் பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர், வரலாற்று உதவி பேராசிரியர் தாமரைகண்ணன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து தொல்லியல் கள ஆய்வாளர்கள் சாத்தங்குடி கிராமத்திற்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனர். அதில் அந்த சிலை நாயக்கர் காலத்தை சேர்ந்த நடுகல் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறியதாவது: திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமம் பன்னெடுங்கால வரலாற்றை தன்னுள் கொண்டுள்ள ஒரு கிராமமாகும். இங்கு இதற்கு முன்பு முற்கால பாண்டியர் கால அய்யனார் சிலை கண்டறியப்பட்டது. இந்நிலையில் நாயக்கர்ளும் இந்த பகுதியை ஆண்டு வந்துள்ளதற்கான கூடுதல் ஆதாரமாக தற்போது இந்த நடுகல் கிடைத்துள்ளது. நடுகல் என்பது போர்களில் வீரமரணம் அடையும் வீரர்களுக்கும், வீரதீர செயல்களில் ஈடுபட்டு இறந்தோருக்கு நடுகல் எடுக்கும் மரபு தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல் முன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பத்தின் இடது புறத்தில் ஒரு வீரன் வாளேந்தியபடியும், மேல்நோக்கிய கொண்டையுடன் நீண்ட காதுகளுடன் ஆடை ஆபகரணங்களுடன் சுகாசனகோளத்தில் வடிவமைகப்பட்டுள்ளது. வலது புறம் அவரது மனைவி சரிந்த கொண்டையுடன் வலது கையில் பூச்செண்டை ஏந்தியபடி சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் தலை பகுதிக்கு இடையில் சிவலிங்கம் இடம் பெற்றுள்ளது. தலைக்கு மேல் நாசிக்கூடு செதுக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் முத்து நாயக்கர், பெண்சாதி நாகம்மாள் என்றுள்ளது. அதாவது நாயக்கர் காலத்தில் சுக்கநாயக்கர் என்பவர் தனது தந்தை வீரமரணம் அடைந்ததன் காரணமாக தந்தை முத்துநாயக்கருக்கும், தாய் நாகம்மாளுக்கும் நடுகல் எடுத்த செய்தியை நமக்கு உணர்த்துவதாக கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

The post திருமங்கலம் அருகே கல்வெட்டு பொறிக்கப்பட்ட நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு: தம்பதிக்கு அமைக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Sathangudi ,
× RELATED திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து