×

ரயில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கில் தலையீடு: கேரள ஐஜி விஜயன் அதிரடி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் முக்கிய விவரங்கள் வெளியானதை தொடர்ந்து ஐஜி விஜயன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். எர்ணாகுளத்தில் இருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பியை மகராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் போலீசார் கைது செய்தனர்.

கைதான ஷாருக் செய்பி சர்வதேச தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்ஐஏவும் விசாரணையை தொடங்கியது. எனவே இந்த வழக்கு தொடர்பான விவரங்களை மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஷாருக் செய்பி கைது செய்யப்பட்டது, அவரை போலீசார் கொண்டு வருவது குறித்த விவரங்கள் உடனுக்குடன் வெளியானது. ரத்தினகிரியில் இருந்து ஷாருக் செய்பியை கேரளாவுக்கு கொண்டு வரும்போது 2 முறை போலீஸ் வாகனத்தில் பழுது ஏற்பட்டது. இது தொடர்பான போட்டோக்களும், விவரங்களும் பத்திரிகைகளில் வெளியானது. ரகசிய விவரங்கள் வெளியானது குறித்து விசாரணை நடத்த கேரள டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டார்.

இதில் கேரள தீவிரவாத தடுப்புப் படை ஐஜியாக இருந்த விஜயன் தான் முக்கிய தகவல்கள் வெளியாக காரணம் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து உடனடியாக ஐஜி விஜயன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பிறகும் தீவைப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளை ஐஜி விஜயன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவரம் டிஜிபி அனில்காந்துக்கு தெரியவந்தது. இதையடுத்து ஐஜி விஜயனை டிஜிபி அனில்காந்த் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

The post ரயில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கில் தலையீடு: கேரள ஐஜி விஜயன் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Kerala ,IG ,Action Suspend ,Thiruvananthapuram ,Kozhikott ,IG Vijayan Action Suspend ,Dinakaran ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு