×

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரிகிரி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி, வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அமாவாசையையொட்டி அதிகாலை முதலே பல்ேவறு மாவட்டங்களில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் தாணிப்பாறை கேட் முன்பு குவிந்தனர்.

காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் மலைபபாதை வழியாக கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். 21 வகையான அபிஷேகம் அமாவாசையை ஒட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

உண்டியல் காணிக்கை ரூ.27 லட்சம்
சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயில் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 17, 18ம் தேதிகளில் நடைபெற்றது. இப்பணிக்கு திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ், பேரையூர் சரக ஆய்வர் சடவர்ம பூபதி, சுந்தரமகாலிங்கம் கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உண்டியல்கள் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல்களில் ரூ.23,74,235, சந்தன மகாலிங்கம் கோயில் உண்டியல்களில் ரூ.3,59,315 என மொத்தம் ரூ.27,33,550ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

The post சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Chaduragiri ,Vadruyiru ,Sadurigiri Temple ,Vaigasi ,New Moon ,Virutunagar District ,Vadruyiripu ,Sadhuragiri ,
× RELATED சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி: கோயில் நிர்வாகம்