×

பாப்பான்விடுதி, குமுளூரில் ஜல்லிக்கட்டு: 1,400 காளைகளுடன் 650 வீரர்கள் மல்லுக்கட்டு

லால்குடி: ஆலங்குடி பாப்பான்விடுதி, லால்குடி குமுளூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 1,400 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 650 வீரர்கள் மல்லுக்கட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான் விடுதி முனீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக மதுரை, சிவகங்கை, பரமக்குடி, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியில் 700 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டை ஆர்டிஓ முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையில் 180 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஆயிரம் வள்ளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டன. 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டை லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏடிஎஸ்பி கோபாலகிருஷ்ணன், லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு போட்டிகளிலும் காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிக்காசு, பீரோ, கட்டில், மின்விசிறி, மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

கிணற்றில் தவறி விழுந்து காளை சாவு
குமுளூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் ரங்கம் மேலூரை சேர்ந்த அஜய் என்பவருக்கு சொந்தமான காளையும் பங்கேற்றது. வாடிவாசல் வழியே சீறி பாய்ந்த காளை வீரர்கள் பிடியில் சிக்காமல் ஓடியது. வாடிவாசலுக்கு வெளியே 100 அடி ஆழம் கொண்ட தண்ணீர் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதில் நீரில் மூழ்கி காளை பரிதாபமாக பலியானது. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் வந்து காளையை மீட்டனர்.

The post பாப்பான்விடுதி, குமுளூரில் ஜல்லிக்கட்டு: 1,400 காளைகளுடன் 650 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Tags : jallikattu ,papanhotel ,kumulur ,Lalkudi ,Alangudi ,Lalkudi Kumulur ,Jallikkat ,Kallukattu ,Dinakaran ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்