×

ஏலக்காயில் இருக்கும் ஏராளமான நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

வாசனைப் பொருட்களின் ராணி என்று சிறப்புப் பெயர் பெற்ற ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருக்கிறது. ஏலக்காய் நிறைய மருத்துவ குணங்களும் கொண்டது. அவை என்னவென்று பார்ப்போம்.ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், பூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.ஏலப்பொடியுடன், சிறிது மிளகுப்பொடி சேர்த்து, சிறிதளவு துளசிச் சாறு சேர்த்து உட்கொண்டால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.ஏலக்காய்த்தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.தேனுடன், ஏலக்காய்த்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கி, நரம்புகள் நன்கு வலிமை அடையும். ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலைவலி சரியாகும்.

ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்த்தூள் சேர்த்து பருகிவர, சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும். நீர்க்கடுப்பு நீங்கும்.

ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை, மாலை தின்று வர, பித்த மயக்கம் சரியாகும்.
நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சனைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும்.

தொகுப்பு: பாலாஜிகணேஷ்

The post ஏலக்காயில் இருக்கும் ஏராளமான நன்மைகள்! appeared first on Dinakaran.

Tags : Saffron Doctor ,India ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!