×
Saravana Stores

இஸ்ரேலுக்கு போட்டியாக கண்டன பேரணி நடத்திய பாலஸ்தீனியர்கள்: பேரணியின் போது பயங்கர வெடிபொருட்கள் வீசப்பட்டதால் பதற்றம்

இஸ்ரேல்: ஜெருசலேம் தினத்தை ஒட்டி பேரணி நடத்திய யூதர்களுக்கு போட்டியாக பாலஸ்தீனியர்களும் கண்டன பேரணியில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல்படை பழைய நகரம் மற்றும் அதன் புனித தளங்கள் கொண்ட கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஜெருசலேம் தினம் கடைபிடிக்கபடுகிறது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற கொண்டாட்டத்தில் பல ஆயிரக்கணக்கான யூதர்கள் அங்குள்ள காசா முனையில் உள்ள மசூதி வழியாக பழைய ஜெருசலேம் நகரம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 2,500 அதிகாரிகளும் உடன் சென்றனர். இஸ்ரயேல்மக்களின் இந்த வெற்றி கொண்டாட்டத்தால் ஆத்திரமடைந்த பாலஸ்தீனியர்கள் சிலர் அதற்கு போட்டியாக காசா முனை அருகே பேரணி நடத்தினர். அப்போது அவர்களில் சிலர் இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள தடுப்பு மீது வெடி பொருட்களை வீசியுள்ளனர்.

இதனால் பதற்றம் அதிகரிக்கவே நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இறங்கிய இஸ்ரேல் காவலர்கள் பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இஸ்ரேல் பாலஸ்தீனமிடையே கடந்த சில நாட்களாக மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் பாலஸ்தீனத்தில் உள்ள விடுதலை அமைப்பான இஸ்லாமிய ஜிகாதின் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்லாமிய ஜிகாதின் அமைப்பும் ஏவுகணைகளை வீசி வருவதால் இரு நாடுகளுக்கு இடையே ஆன மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.

The post இஸ்ரேலுக்கு போட்டியாக கண்டன பேரணி நடத்திய பாலஸ்தீனியர்கள்: பேரணியின் போது பயங்கர வெடிபொருட்கள் வீசப்பட்டதால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Palestinians ,Israel ,Jews ,Jerusalem Day ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!!