×

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புது டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். அவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2017ம் ஆண்டு ரூ.1.62கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் என சத்யேந்தர் ஜெயின் தொடர்ந்த அனைத்து மனுக்களையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஏ.எஸ்.போபன்னா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சத்யேந்தர் ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,‘‘திகார் சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயின் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக அவர் 35 கிலோ உடல் எடை குறைந்துள்ளார் ’’ என தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister ,Satyendar Jain ,Department of Enforcement ,Supreme Court ,Delhi Minister ,Supreme Court Action ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: கெஜ்ரிவால் அறிவிப்பு