×

சித்தூர்-தச்சூர் 6 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேட்டி

சென்னை: சித்தூர்-தச்சூர் 6 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில், ஆந்திர மாநிலம்-சித்தூர் முதல், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வரை 126.550 கி.மீ. தூரத்துக்கு ஆறு வழி பசுமைச்சாலை அமைக்கும் பணிகள் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் முப்போகம் விளையக் கூடிய இப்பகுதியின் விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் 6 வழிச் சாலை திட்டத்தை மாற்று வழிகளில் ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 43 கிராமங்களில் உள்ள 880 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளன. முழுக்க முழுக்க இந்த திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே வேகமாக செயல்படுத்தப்படுகின்றது. இந்நிலையில், திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிவரும் மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, ஊத்துக்கோட்டை அருகிலுள்ள தொம்பரம்பேடு கிராமத்தில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

தொடர்ந்து சென்னையில் நேற்று மார்கண்டேய கட்ஜு அளித்த பேட்டி: கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக, உணவளிக்கும் விவசாய நிலங்களை பறிக்கும் திட்டத்துக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்கிறேன். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க என்னுடைய ஆலோசனையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றார். பேட்டியின் போது எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் ஏ.கே.கரீம், ஜெய் கிசான் அந்தோலன் விவசாயிகள் அமைப்பின் தலைவர் அவிக் ஷாகா, ஆறு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ராம் நாயுடு, ரமேஷ், தேவராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் தாராபுரம் வேலு, சிவக்குமார், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், எஸ்.டி.பி.ஐ. வட சென்னை மண்டலத் தலைவர் முகமது ரஷீத் உடன் இருந்தனர்.

The post சித்தூர்-தச்சூர் 6 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Margandaya Katju ,Chennai ,Chittoor ,Dachur ,
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து