×

ஒரே நாளில் 19 இடங்களில் சதமடித்தது தமிழகத்தில் 8 மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இது தவிர 11 மாவட்டங்களில் 104 டிகிரி வெபபம் நிலவியது. மொத்தம் 19 மாவட்டங்களில் வெயில் சதமடித்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: வங்கக் கடலில் உருவாகி மியான்மர் நோக்கி நகர்ந்த மோக்கா புயல் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக 115 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டது. நேற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது.

பேரையூர், சின்னசித்துலோட்டி, சிவகாசி, சாத்தூர், விருதுநகர், ஆற்காடு, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. அதேபோல, கழுகுமலை, திருவேங்கடம், அருப்புக்கோட்டை, கல்லக்குடி, கயத்தாறு, திருத்தணி, சோளிங்கர், அரக்கோணம், வேலூர், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நிலவியது. மேலும், ஆம்பூர், குடியாத்தம், நெல்லை, ஆவடி, அம்பத்தூர், காஞ்சிபுரம், மானாமதுரை ஆகிய இடங்களில் 102 டிகிரி, வெயில் நிலவியது. இதன் காரணமாக மேற்கண்ட இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்துள்ளது. குறிப்பாக அமராவதி அணை 30 மிமீ, சூலூர், சூளகிரி, வால்பாறை, பாப்பிரெட்டிப்பட்டி 20மிமீ, சின்னகல்லாறு, பல்லடம், பெரியநாயக்கன் பாளையம், ஏற்காடு, கூடலூர், கோவை விமான நிலையம், ஓசூர், கிருஷ்ணகிரி, பழநி, கங்கவல்லி 10மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், நீலகிரி, சென்னை, ஈரோடு, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று குறைந்து காணப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, திருப்பத்தூர், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பம் இருந்தது. இன்னும் 3 நாட்களுக்கு இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக் கூடும். மேலும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும், 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக் கூடும்.

The post ஒரே நாளில் 19 இடங்களில் சதமடித்தது தமிழகத்தில் 8 மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Inspection Centre ,Chennai ,Meteorological Centre ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...