×

ஜேடர்பாளையத்தில் நள்ளிரவில் 500 வாழை மரங்களை வெட்டி சாய்த்த கும்பல்: தொடரும் சம்பவங்களால் நீடிக்கும் பதற்றம்

நாமக்கல்: பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாயக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் கரப்பாளையத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த மார்ச் 11ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 17 வயது சிறுவனை, ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். ஆனால், இந்த கொலை வழக்கில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என, பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் உள்ள வெல்லம் உற்பத்தி ஆலை கொட்டகைகளுக்கு தீ வைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது. கடந்த 14ம்தேதி, ஜேடர்பாளையத்தில் உள்ள முத்துசாமி என்பவரின் ஆலை கொட்டகையில் வேலை செய்யும் 4 தொழிலாளர்கள், அறையில் தூங்கிக் கொண்டு இருந்தபோது, மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் 4 பேரும் தீயில் கருகினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைவில் சேர்த்தனர். அங்கு ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ரோகி என்ற ராஜேஷ் (19) என்பவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி, தொழிலாளர்கள் மீது தீ வைத்தவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதியில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், 600க்கும் மேற்பட்ட போலீசார், ஜேடர்பாளையத்தின் நான்கு எல்லையிலும், 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 16 வெல்ல உற்பத்தி ஆலைகளின் அருகில் உயர் கோபுரங்கள் அமைத்து, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஜேடர்பாளையத்தில் ஆலை கொட்டகை வைத்துள்ள முத்துசாமியின் மருமகன் முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் வாழை தோப்பு ஜேடர்பாளையம்-கரப்பாளையம் செல்லும் சாலையில் உள்ளது.

இங்கு நேற்றிரவு புகுந்த மர்மநபர்கள் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டி சாய்த்தனர். மேலும் அங்கிருந்த பாக்கு மரக்கன்றுகளும் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. இதனை இன்று காலை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த எஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ஜேடர்பாளையம் பகுதி முழுவதையும் போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் மர்மநபர்கள் தோப்பில் புகுந்து வாழை மரங்களை வெட்டியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிக்கும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜேடர்பாளையத்தில் நள்ளிரவில் 500 வாழை மரங்களை வெட்டி சாய்த்த கும்பல்: தொடரும் சம்பவங்களால் நீடிக்கும் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Jedarbamalam ,NAMAGKAL ,Jedarbam ,Paramativelur ,Namakkal District ,Dinakaran ,
× RELATED கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம்