×

விஷசாராயம் குடித்து 13 பேர் பலி தொழிற்சாலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

மரக்காணம், மே 18: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் பகுதி வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்த விஷச் சாராயத்தை குடித்து 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற மொத்த வியாபாரிகளிடம் கள்ளச்சாராயத்தை வாங்கினோம். இந்த சாராயத்தை நாங்கள் எக்கியர்குப்பம் மீனவர் பகுதியில் விற்பனை செய்தோம் என்று மரக்காணம் பகுதியில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து புதுவை மாநிலத்தை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் ஏழுமலையை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை வானகரம் பகுதியில் தொழிற்சாலை அமைத்து அங்கு தயாரிக்கப்படும் மெத்தனாலை, உரிமையாளர் இளைய நம்பி(55) மற்றும் பணியாளர்கள் எங்களுக்கு மொத்தமாக வழங்கினர். இந்த மெத்தனால் கலந்த எரி சாராயத்தை தான் நாங்கள் மரக்காணம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்தோம், என்று கூறியுள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் சென்னை வானகரம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை உரிமையாளர் இளையநம்பி மற்றும் பணியாளர்கள் சிலரை கைது செய்து மரக்காணம் காவல் நிலையத்தில் வைத்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post விஷசாராயம் குடித்து 13 பேர் பலி தொழிற்சாலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Villupuram district ,Ekyarkuppam ,Vamba Medu ,Dinakaran ,
× RELATED கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம்