பாலக்காடு, மே 18: கேரள-தமிழக எல்லை எருத்தியாம்பதி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட வண்ணாமடை, மூங்கில் மடை பகுதியில் சாலையோரம் கழிவு பொருட்கள் வீசிய நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை கிராம பஞ்சாயத்து நிர்வாகம் விதித்தது.பாலக்காடு மாவட்டம், எருத்தியாம்பதி கிராம பஞ்சாயத்து சாலையோரங்களில் குவிந்து கிடகும் கழிவு பொருட்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இப்பணிகளில் கிராம பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள், தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியாளர்கள், சுகாதார துறையினர், பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர். கிராம பஞ்சாயத்து செயலாளர், ஊழியர்கள் ஆகியோர் தலைமையில் ஜேசிபி, பொக்லைண் ஆகியவை உபயோகித்து குப்பை கிடங்குகளை சுத்தப்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் எருத்தியாம்பதி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மூங்கில்மடை சாலையோரம் சுத்தம் செய்த இடத்தில் சாமுன்னி என்பவர் மகன் ராஜன், கழிவு பொருட்கள் பைக்கில் கொண்டு வந்து சாலையோரம் வீசியுள்ளார்.இந்த காட்சி சிசிடிவியில் பதிவானது. இதனைத்தொடர்ந்து ராஜனுக்கு பஞ்சாயத்து சுகாதாரத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கழிவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என எருத்தியாம்பதி கிராம பஞ்சாயத்து செயலாளர், பொதுமக்களுக்கு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post கேரள – தமிழக எல்லை கிராமத்தில் கழிவு பொருட்கள் வீசிய நபருக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.
