×

‘முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் பதவி விலக வேண்டும்’ விஷ சாராய பலிக்கு புதுச்சேரிதான் காரணம்: மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: மரக்காணத்தில் நடந்த விஷசாராய பலிக்கு புதுச்சேரிதான் காரணம். எனவே புதுவை முதல்வர், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நிர்வாக ரீதியாக யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில், தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு நிர்வாகத்தை நடத்துவதற்கு அதிகாரம் இருக்கிறது. அதிகாரிகளை நியமிக்கவும், மாற்றவும் அதிகாரம் இருக்கிறது என சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என கவர்னர் தமிழிசை கூறி இருக்கிறார். அதே நேரத்தில் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் ரங்கசாமி கூறுகிறார். அவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது இதில் இருந்து தெரிகிறது.

மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்த கள்ளச்சாராய பலி குறித்த விசாரணையின்போது மெத்தனால் கலக்கப்பட்ட சாராயத்தை விநியோகம் செய்த முத்தியால்பேட்டையை சேர்ந்த பர்கத் அலி என்கிற ராஜாவும், வில்லியனூர் தட்டாஞ்சாவடியை சேர்ந்து ஏழுமலையும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பையும் முதல்வர் ரங்கசாமி ஏற்க வேண்டும். தமிழ்நாட்டில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தபோது இங்கிருக்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என துணை நிலை கவர்னர் தமிழிசை சொல்கிறார். புதுச்சேரியில் பிளாஸ்டிக் கரம் கொண்டாவது சாராய வியாபாரிகளை ஒடுக்குவாரா?. கலால்துறை மீது நடவடிக்கை எடுக்காததற்கு லஞ்சமும், மாமூலும்தான் காரணம். ரங்கசாமியின் பெட்டி நிறைந்தால் போதும் என்று இருக்கிறார். இப்படியே செயல்பட்டு புதுச்சேரி மாநிலத்தை குட்டிச்சுவராக்கி வருகிறார். மரக்காணம் விஷ சாராய பலிக்கு புதுச்சேரிதான் காரணம். இதற்காக சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் ரங்கசாமி தயாரா? இதற்கு பொறுப்பேற்று முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* புதுவை சாராய வியாபாரிகள் கைது
மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து 13 பேர் பலியானது தொடர்பாக, சாராயம் விற்பனை செய்த அமரன்(24), முத்து(38), ஆறுமுகம்(47) ரவி(50) மண்ணாங்கட்டி(52) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், இவர்களுக்கு விற்பனை செய்தது, புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பர்கத்துல்லா என்ற ராஜா(48), தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஏழுமலை (50) ஆகிய 2 பேர் என்பது தெரிந்தது. இதையடுத்து, புதுவை சாராய வியாபாரிகள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* ‘விஷ சாராய பலிகளுக்கு புதுவை அதிகாரிகளே காரணம்’: கலால் துறை அலுவலகத்தில் சுயேச்சை எம்எல்ஏ வாக்குவாதம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியாகியுள்ளனர். புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்ட எரிசாராயம் மற்றும் மெத்தனால் போன்றவற்றால் தான் இச்சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து எரிசாராயம் கடத்தப்படுவதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி சட்டமன்றத்தில் பேசியுள்ளார். கலால் துறையிடமும் பலமுறை புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கலால் துறை அலுவலகத்துக்கு நேரு எம்எல்ஏ நேற்று காலை சென்றார். அங்கு கலால் துறை அதிகாரிகளிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார். ‘புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என பலமுறை புகார் கூறினேன். ஆனால் நடவடிக்கை இல்லை. இப்போது பல உயிர்கள் பலியாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முயற்சிகளை மேற்கொள்வேன். போராட்டமும் நடத்துவேன். வரும்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்திட வேண்டும்’ என ஆவேசமாக கூறிவிட்டு சென்றார். எம்எல்ஏவின் இந்த திடீர் வாக்குவாதத்தால் கலால் துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ‘முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் பதவி விலக வேண்டும்’ விஷ சாராய பலிக்கு புதுச்சேரிதான் காரணம்: மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Maji ,Chief Minister ,Narayanasamy ,Vishasharaya ,Marakkana ,Interior Minister ,Rangasamy ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை