×

கடலாடி மணல் குவாரியில் சப்-கலெக்டர் ஆய்வு; மணல் லாரி டிரைவர்கள் ஓட்டம்: விஏஓ மயக்கமடைந்ததால் பரபரப்பு

ராமநாதபுரம்: கடலாடி மலட்டாற்றில் பரமக்குடி சப்-கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை எடுத்துக் கொண்டு டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கே.வேப்பங்குளம் மலட்டாறு ஆற்று புறம்போக்கு பகுதியில் அரசு மணல் குவாரி உள்ளது. இந்த நிலையில் சிலர் மணல் குவாரி அருகிலுள்ள தனியார் பட்டா இடங்களில், அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக புகார்கள் வந்தன. மணல் கொள்ளையர்கள் 10க்கும் மேற்பட்ட மணல் அள்ளும் இயந்திரங்களை கொண்டு, விதிமுறைகளை மீறி, 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மணல் அள்ளி வெளியில் அதிக விலைக்கு விற்பதால், அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த தொடர் மணல் கொள்ளையால் ஆப்பனூர், மங்களம், கடலாடி, எம்.கரிசல்குளம், கூரான்கோட்டை பஞ்சாயத்துகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வந்தது. மழைக்காலத்தில் காட்டாறு வழியாக பெருக்கெடுத்து ஓடி வரும் மழை நீர், தேங்க வழியில்லாமல் கடலில் வீணாக கலக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதனையடுத்து பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், மலட்டாறு பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சப்-கலெக்டரை கண்டதும் 50க்கும் மேற்பட்ட லாரிகளை எடுத்துக் கொண்டு, டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆய்வில் தனியார் பட்டா இடங்களில் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது விவசாயிகளும், சப்-கலெக்டரை சந்தித்து புகார் கூறினார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சப்-கலெக்டர் உறுதியளித்தார். இதனையடுத்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். கடலாடி தாசில்தார் ரெங்கராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.ஆய்வின்போது விஏஓ ஒருவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

The post கடலாடி மணல் குவாரியில் சப்-கலெக்டர் ஆய்வு; மணல் லாரி டிரைவர்கள் ஓட்டம்: விஏஓ மயக்கமடைந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Paramakkudy ,Collector ,Kudladadi Malattari ,Kadladadi Sand Quarry ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்