×

பாரத் கவுரவ் சிறப்பு ரயிலில் புனித யாத்திரை ரூ.45,000 வாங்கியும் தங்க இடம் தரவில்லை: தமிழக பக்தர்கள் குற்றச்சாட்டு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இருந்து பாரத் கவுரவ் சிறப்பு ரயிலில் புனித யாத்திரை சென்ற தமிழக பக்தர்களுக்கு, தங்க இடம் செய்து தரவில்லை மற்றும் வட இந்திய உணவு மட்டுமே வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய ரயில்வே சார்பில் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் காசி, கயா, கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த 5ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில் 800 பேர் பயணித்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து மட்டும் 220 பேர் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள். இவர்களிடம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. சுற்றுலா முடிந்து நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய ரயில், இரவு 11 மணியளவில் வந்தடைந்தது. ஊர் திரும்பிய பக்தர்கள் ரயில்வே நிர்வாகம் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுரித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘தமிழகம் மற்றும் கேரளா என பல்வேறு பகுதிகளில் இருந்து சென்றவர்களுக்கு பழக்கமான இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முழுமையாக வட இந்திய உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுக்கு செல்லும் ஊரில் பக்தர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் அறை வசதியும் ரயில்வே நிர்வாகம் செய்து தரவில்லை. வழிகாட்டிகள் பெரும்பாலும் இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே இருந்தனர். 2 தமிழ் வழிகாட்டிகளுக்கும் போதுமான விளக்கம் சொல்ல தெரியவில்லை. தங்கியிருந்த இடத்திற்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்கு இடையே தூரம் அதிகமாக இருந்தும், போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை. எனவே முதியவர்கள் ரூ.2 ஆயிரம் வரை செலவளித்து பயணித்தனர். இதனால் கோயில்களிலும் சரிவர வழிபாடு செய்ய முடியவில்லை’’ என்றனர்.

The post பாரத் கவுரவ் சிறப்பு ரயிலில் புனித யாத்திரை ரூ.45,000 வாங்கியும் தங்க இடம் தரவில்லை: தமிழக பக்தர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Bharat Gaurav ,Tamil Nadu ,Rajapalayam ,Bharat ,Gaurav ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...