×

கள்ளச்சந்தையில் விற்க முயன்ற ரூ.23 லட்சம் மதிப்பு ரேஷன் அரிசி பறிமுதல்: 529 பேர் அதிரடி கைது

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரே மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற ரூ.23 லட்சம் மதிப்பிலான ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, 529 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மற்றும் உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ23,61,969 மதிப்புள்ள 3,293 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 152 எரிவாயு உருளைகள், 90 கிலோ கோதுமை, 250 கிலோ துவரம்பருப்பு, மண்ணெண்ணெய் 251 லிட்டர் உள்ளிட்டவைகளும், இந்த பொருட்களை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 156 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், குற்றச்செயலில் ஈடுபட்ட 529 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டத்தின்படி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல, கள்ளச்சந்தையில் விற்பனை தொடர்பான விவரங்கள் தெரியவரும் பட்சத்தில் பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கள்ளச்சந்தையில் விற்க முயன்ற ரூ.23 லட்சம் மதிப்பு ரேஷன் அரிசி பறிமுதல்: 529 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...