×

என்னை முதல்வராக்கினால் ஆட்சி நடத்த நான் தயார்: முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் அதிரடி

பெங்களூரு: காங்கிரஸ் தலைமை முடிவு செய்து என்னை முதல்வராக்கினால் ஆட்சியை நடத்த நான் தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் துணை முதல்வரும், தற்போது முதல்வர் போட்டியில் இருப்பவருமான ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார். கர்நாடகா முதல்வர் தேர்வில் இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்வர் போட்டியில் இருக்கும் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘காங்கிரஸ் தலைமைக்கு என்னுடைய சேவை குறித்து நிறைய தெரியும். ஆனால் முதல்வர் பதவிக்காக லாபி செய்ய நான் விரும்பவில்லை. கட்சி தலைமை முடிவு செய்து ஆட்சியை நடத்த என்னை கேட்டுக்கொண்டால் நான் பொறுப்பேற்க தயாராக இருக்கிறேன். கட்சி மேலிடத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கென சில கொள்கைகள் வகுத்து வைத்துள்ளேன். 50 எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு சென்று கூச்சல் எழுப்ப என்னாலும் முடியும். ஆனால் கட்சியில் ஒழுக்கம் முக்கியம்.

என்னைப்போன்றவர்கள் அப்படி செய்தால் கட்சியில் ஒழுக்கம் இருக்காது. மேலிடம் முடிவெடுத்து பொறுப்பு வழங்கினால் ஏற்றுக்கொள்வேன். முடியாது என்று சொல்லமாட்டேன். நான் காங்கிரசுக்காக 8 ஆண்டுகள் தலைவராக இருந்து எவ்வளவோ பணியாற்றியுள்ளேன். 2013ம் ஆண்டு கட்சி ஆட்சியை பிடித்தது எனது தலைமையின் கீழ் தான். துணை முதல்வராகவும் இருந்துள்ளேன். இதனால் ஆட்சி நடத்தக்கூடிய திறமை எனக்கும் உள்ளது. ஆனால் இதற்காக லாபி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அமைதியாக இருக்கிறேன். அதனால் நான் திறமையற்றவன் என்று அர்த்தமில்லை. வாய்ப்பு கொடுத்தால் என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன். அடுத்த முதல்வரை மேலிடம் முடிவெடுக்கும். மக்களிடம் நிறைய வாக்குறுதிகள் அளித்துள்ளோம். அதை நிறைவேற்ற வேண்டிய கடமை இருக்கிறது’ என்றார்.

The post என்னை முதல்வராக்கினால் ஆட்சி நடத்த நான் தயார்: முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Deputy Chief ,Parameswar ,Action ,Bengaluru ,Congress ,Principal ,Parameswar Action ,
× RELATED மனைவியை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு அனுமதி..!!