×

பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு நாளை துவங்குகிறது: மூன்று நாட்கள் நடப்பதாக வனத்துறையினர் தகவல்

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட, பொள்ளாச்சி வனக்கோட்ட பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நாளை (17ம்தேதி) துவங்கி 3 நாட்கள் நடப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனகோட்டம், உடுமலை வனக்கோட்டம் என இரண்டு கோட்டங்களிலும் மொத்தம் 6 வனசரங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, காட்டுமாடு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்கள் வாழ்கின்றன.

இந்த புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி என 2 கட்டமாக நடக்கிறது. இதில் கடந்த டிசம்பர் மாதம் குளிகால வன விலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அப்போது, கண்ணில் தென்பட்ட அனைத்து விலங்குகளும் கணக்கெடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, மற்றும் வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களிலும், யானைகள் கணக்கெடுப்பு நடத்த வனத்துறை முடிவு செய்தது.

அதன்படி, நாளை (17ம் தேதி) முதல் 19ம் தேதி வரை என மொத்தம் 3 நாட்கள், யானைகள் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. வன விலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர், வேட்டை தடுப்பு காவலர்கள், வனவர், தன்னார்வலர் கொண்ட குழுவினர்களுக்கு இன்று (16ம் தேதி) அட்டக்கட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் முடிந்தவுடன், தனித்தனி குழுவாக வனப்பகுதிகளுக்குள் சென்று, நாளை முதல் யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபடுவார்கள் என்றும். இப்பணியில் ஈடுபடுவோருக்கு, தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்படுகிறது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில், ஆண்டுதோறும் 2 முறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் அவ்வப்போது புலிகள் கணக்கெடுப்பு மற்றும் யானைகள் கணக்கெடுப்பு என தனியாக நடத்தப்படுகிறது. வனவிலங்கு கணக்கெடுப்பின்போது யானைகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், தனியாக யானைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ளது. தற்போது மீண்டும் யானை கணக்கெடுப்பு பணி நடைபெறுவதால், ஆனைமலை புலிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எத்தனை யானைகள் உலா வருகிறது என்பது குறித்த தனக்கு தெரியவரும்.

இதற்காக, நாளை முதல் (17-ம் தேதி) முதல் 19 ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்படுகிறது. இருப்பினும் கண்ணில் தென்படும் பிற விலங்கு குறித்தும் பதிவு செய்யப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு நாளை துவங்குகிறது: மூன்று நாட்கள் நடப்பதாக வனத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pollachi Forests ,Pollachi ,Animalai Tigers Archive ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...