×

சமயபுரம் கோயிலில் பஞ்சப்பிரகார விழா

சமயபுரம்: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். இந்த விழா கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானை மேல் வைத்து ரங்கம் ரங்கநாதர் கோயில் பட்டர்கள் புனித நீரை எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தது.

இதனை தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் அம்மன் வெள்ளி விமானத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடிமரம் இரண்டாவது சுற்று, தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் நான்காவது சுற்று, கீழரத வீதி மேல ரத வீதி வடக்கு ரதவீதியில் ஐந்தாவது சுற்றாகவும் பஞ்சப்பிரகார சுற்றுகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. இன்று (16ம் தேதி) இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18ம் தேதி தங்க கமல வாகனத்திலும், 19ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20ம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21ம் தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22ம் தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23ம் தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

The post சமயபுரம் கோயிலில் பஞ்சப்பிரகார விழா appeared first on Dinakaran.

Tags : Panchaprakara Festival ,Samayapuram Temple ,Samayapuram ,Trichy Samayapuram Mariamman Temple ,Panchaprakaram ,Panchaprakara ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்தில் வைக்கோல் போர் எரிந்து சேதம்