×

ஆஷஸ் தொடருக்கு ஆயத்தம்…: கவாஜா உற்சாகம்

சிட்னி: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி தொடக்க வீரர் உஸ்வான் கவாஜா (36). 2011ல் அறிமுகமான இவர் இதுவரை 60 டெஸ்ட்களில் விளையாடி 4495 ரன் (அதிகம் 195*, சராசரி 47.81, சதம் 14, அரை சதம் 21) விளாசியுள்ளார். 2022 ஜனவரி முதல் இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீராக திகழ்கிறார். இந்த ஓராண்டுக்கும் அதிகமான காலத்தில் 1608 ரன் குவித்துள்ளார். அதில் 333 ரன் இந்தியாவில் நடைபெற்ற சமீபத்திய டெஸ்ட் தொடரில் சேர்த்தவை. அதிலும் மார்ச் மாதம் நடந்த கடைசி டெஸ்ட்டில் 180 ரன் விளாசினார்.

இந்திய தொடரில் அசத்தியதால் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸி. அணிக்காக விளையாட தேர்வாகி உள்ளார். இந்தியாவுக்கு எதிரான பைனலை விட, பாராம்பரியமான ஆஷஸ் தொடரைதான் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பதாகக் கூறுகிறார் கவாஜா. இது குறித்து அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் நான் விளையாடியதை விட இப்போது சிறப்பாக விளையாடும் அனுபவம் உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சிறந்த வீரராக உணருகிறேன். வெற்றி பெறும் அணியில் உங்கள் பங்களிப்பு சிறப்பானதாக இருப்பது அருமையான தருணம். ஒரு வீராக 2, 3 போட்டிகளில் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. அது விமர்சனத்துக்கும் உள்ளாகும். அதன் பிறகு நீங்கள் ரன் அடிக்க ஆரம்பித்து விடுவீர்கள். மறுபடியும் நிலைமை மாறலாம். அது கிரிக்கெட் விளையாட்டின் சுழற்சி. சிறந்த ஆட்டத்திறனில் இருக்கும் வீரர்களை தேர்வு செய்கிறார்கள். அது தற்காலிகமானது. அந்த ஆட்டத்திறன் எல்லா ஆட்டங்களிலும் எதிரொலிக்கும் என்று கூற முடியாது.

இங்கிலாந்தின் சில ஆடுகளங்களில் ரன் குவிப்பது கஷ்டம். ஆனாலும், ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். கடினமாக உழைக்கத் தயாராக இருந்தாலும், ரன் குவிப்பேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம்… இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இருவரும் மிக அருமையான வேகப் பந்துவீச்சாளர்கள். தொடக்கத்தில் அவர்களை எதிர்கொள்வது சிரமாக இருக்கும். அவர்களை சமாளித்துவிட்டால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் என நம்புகிறேன். இவ்வாறு கவாஜா கூறியுள்ளார்.

The post ஆஷஸ் தொடருக்கு ஆயத்தம்…: கவாஜா உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Ashes Series ,Kawaja ,Sydney ,Uzwan Kawaja ,Dinakaran ,
× RELATED இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்தேன்: ரிக்கி பாண்டிங்