×

கொலிஜியம் குறித்த கருத்து விவகாரம்; துணை ஜனாதிபதி, சட்ட அமைச்சர் மீதான மேல்முறையீடு மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டெல்லி: கொலிஜியம் குறித்த கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி, ஒன்றிய சட்ட அமைச்சர் ஆகியோருக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘நாடாளுமன்றத்திற்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதித்துறை மதிக்க வேண்டும். அதில் தலையிடுவதற்கு நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறி இருந்தார். இந்த பின்னணியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுதிய கடிதத்தில், ‘கொலிஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பேற்கும் முறை இல்லை.

கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்படும் பெயர்களைத்தான் அரசு ஏற்க வேண்டும் என்றால், அதில் அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது’ என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் கொலிஜியம் குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்நிலையில் துணை ஜனாதிபதி, அமைச்சர் ஆகியோர் கொலிஜியம் குறித்து கூறிய கருத்துகளுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் பாம்பே பார் அசோசியேசன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், கொலிஜியம் குறித்த விவகாரங்களை உச்ச நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாம்பே பார் அசோசியேசன் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் ெசய்யப்பட்டது. இம்மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானது தான். கொலிஜியம் குறித்து துணை ஜனாதிபதி, அமைச்சர் போன்றோர் கூறிய கருத்துகள் சர்ச்சைக்குரிய விஷயமாக உச்ச நீதிமன்றம் கருதினால், அதனை உச்ச நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்’ எனக்கூறி மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post கொலிஜியம் குறித்த கருத்து விவகாரம்; துணை ஜனாதிபதி, சட்ட அமைச்சர் மீதான மேல்முறையீடு மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vice President ,Supreme Court ,Delhi ,Union ,Law Minister ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...