×

மாஜி அமைச்சருடன் 2 கைதிகளை அடைத்து வைத்த திகார் ஜெயில் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ்: மன அழுத்தத்தில் இருந்தவருக்கு சலுகை காட்டியதால் சிக்கல்

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சருக்கு சலுகை காட்டிய ஜெயில் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணமோசடி வழக்கில் ெடல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அரசின் முன்னாள் அமைச்சரும், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின், சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘எனது அறையில் கூடுதலாக சில கைதிகளை அடைத்து வையுங்கள். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று கைதிகளையாவது எனது அறைக்குள் அடைத்து வையுங்கள். நான் தனிமையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால், மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்யேந்தர் ஜெயினின் வேண்டுகோளின் பேரில், சிறை எண்:7-இன் சிறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி சத்யேந்தர் ஜெயின் அடைக்கப்பட்டுள்ள சிறையின் அறைக்குள், மேலும் இரண்டு கைதிகளை மாற்றினார். திடீர் திருப்பமாக திகார் சிறை நிர்வாகத்திற்கு தெரியவந்ததால், இரு கைதிகளும் மீண்டும் அவர்களது பழைய அறைகளுக்கே மாற்றப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக ஏழாம் எண் சிறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்குமாறு சிறை கண்காணிப்பாளரை திகார் சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து திகார் சிறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘சிறை நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல், 7வது எண் ஜெயில் சூப்பிரண்டு தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார்.

உயர் அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல், சத்யேந்தர் ஜெயினுடன் மேலும் 2 கைதிகளை அவரது அறையில் அடைத்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் ரவுடி தில்லு கொல்லப்பட்ட சம்பவம், பெரும் தலைவலியாக மாறியது. அதன் தொடர்ச்சியாக அனைத்து சிறை அறைகளும் மாற்றியமைக்கப்பட்டன. அப்போது சத்யேந்தர் ஜெயினின் அறைக்குள் இரு கைதிகள் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து ஜெயில் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

The post மாஜி அமைச்சருடன் 2 கைதிகளை அடைத்து வைத்த திகார் ஜெயில் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ்: மன அழுத்தத்தில் இருந்தவருக்கு சலுகை காட்டியதால் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Dhikar Jail Superund ,Maji Minister ,New Delhi ,Jail Superandt ,Delhi ,Dhikar ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி