×

புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை: புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மணப்பாக்கம் நெடுஞ்சாலை என்பது ராமாபுரத்தையும் – குன்றத்தூர் நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலையாகும். கிட்டதட்ட 8 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதிகள் பாதாள சாக்கடைத் திட்டம் உட்பட பல்வேறு பணிகள் காரணமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

ஓராண்டிற்கும் மேல் இப்பணிகள் நடைபெறுவதால் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பகுதிகளில் கூட சாலைகள் போடப்படவில்லை. இது தவிர, பெரும்பாலான இடங்களில் புதிய தார்ச் சாலை போடுவதற்காக சாலையின் மேற்பரப்புகள் அகற்றப்படுகின்றன. பல நாட்கள் ஆகியும் போடப்படாத நிலை நிலவுகிறது. ஓரிரு இயந்திரங்களை வைத்துக் கொண்டு பல சாலைகளுக்கான பணிகளை ஒரே ஒப்பந்தக்காரர் மேற்கொள்ளும்போது இது போன்ற தாமதங்கள் ஏற்படுகின்றன. ஒப்பந்தப் பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கும் முன்பே அவர்களிடம் போதுமான ஆட்கள், இயந்திரங்கள் போன்றவை உள்ளனவா என்பதை அறிந்து ஒப்பந்தங்களை அளிக்க வேண்டும்.

அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : O. Pannier ,Chennai ,O.G.A. ,Pannier ,O. Penneer ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...