×

துக்க வீட்டுக்கு வர எதிர்ப்பு; இரு தரப்பினர் போராட்டம்: வேங்கைவயலில் மீண்டும் பரபரப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் வேங்கைவயலில் மூதாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அவரது வீட்டில் துக்கம் விசாரிக்க ஒரு இயக்கத்தின் மாநில செயல் தலைவர் மற்றும் அந்த இயக்கத்தினர் நேற்றிரவு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இறையூரை சேர்ந்த 10 பேர் இவர்களது காரை மறித்து ஊருக்குள் வரக்கூடாது என தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் அந்த இயக்கத்தின் இளைஞரணி செயலாளர் நாகராஜ் புகார் அளித்தார்.

அதே நேரத்தில் வேங்கைவயலை சேர்ந்த சுமார் 20 பேர் அவர்கள் கிராம சாலையில் அமர்ந்து வேங்கைவயல் வருவோரைத் தடுக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இறையூரைச் சேர்ந்த சுமார் 50 பேர் திரண்டு வெளியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினார். இதனால் வேங்கைவயலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post துக்க வீட்டுக்கு வர எதிர்ப்பு; இரு தரப்பினர் போராட்டம்: வேங்கைவயலில் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vengayfield ,Pudukkottai ,CPCID police ,Vengaivayal ,Pudukkotta district ,Vangayfield ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை