×

வத்தலக்குண்டு – செம்பட்டி சாலையில் 10 கி.மீ இடைவெளியில் இரு லட்சுமிபுரம் கிராமங்கள்

* வெளியூர் பயணிகள் தவிப்பு * அடையாளம் காண வழி கிடைக்குமா?

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு – செம்பட்டி சாலையில் லட்சுமிபுரம் என்ற கிராமங்கள் 10 கி.மீ இடைவெளியில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து வருவோர் பஸ்களில் இருந்து ஊர்மாறி இறங்கி தவிக்கின்றனர். எனவே இந்த கிராமங்களின் அடையாளத்தை அறிய பெயருக்கு முன்பு பக்கதிலுள்ள பெரிய ஊரின் முதலெழுத்தை சேர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் 16 கி.மீ தூரத்தில் செம்பட்டி அமைந்துள்ளது. இந்த சாலையில் வத்தலக்குண்டுவில் இருந்து மூன்றாவது கி.மீ தூரத்தில் லட்சுமிபுரம் என்ற கிராமம் உள்ளது. அதேபோல செம்பட்டி வருவதற்கு 4 கி.மீ முன்பாக சித்தையன் கோட்டை பிரிவு அருகே மற்றொரு லட்சுமிபுரம் உள்ளது. இதன்படி இரு லட்சுமிபுரமும் நெடுஞ்சாலையையொட்டியே காணப்படுகிறது. இதனால் பஸ்கள் இந்த ஊர்களுக்கு வரும் வெளியூர் நபர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக உறவினர் இல்ல திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து வருவோர் பேருந்தில் லட்சுமிபுரம் என டிக்கெட் எடுக்கின்றனர். குறிப்பிட்ட நிறுத்தத்தில் கண்டக்டர் லட்சுமிபுரம் என கூறியவுடன் அவர்கள் இறங்குகின்றனர். ஆனால் அவர்கள் இறங்க வேண்டியது மற்றொரு லட்சுமிபுரம் என்பது அதன்பிறகுதான் தெரியவருகிறது.

உதாரணமாக, வெளியூரில் இருந்து ஒருவர் ஒரு விசேஷத்தில் கலந்து கொள்ள லட்சுமிபுரம் புறப்பட்டு வருகிறார் என கணக்கில் கொள்வோம். அவர் லட்சுமிபுரம் எங்கு இருக்கு என்று திண்டுக்கல்லில் விசாரிக்கும் போது செம்பட்டிக்கும், வத்தலக்குண்டுவிற்கும் நடுவே உள்ளதாக கூறுவார்கள். அதன்படி அந்த நபர் செம்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் இறங்கி விடுகிறார். ஆனால் விசேஷம் நடப்பதோ வத்தலக்குண்டு அருகே உள்ள லட்சுமிபுரத்தில். விசேஷத்துக்கு வந்தவருக்கு செம்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரத்துக்கு சென்ற பிறகுதான் உண்மை தெரிகிறது. மறுபடியும் அவர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தால் வெளியூர் செல்லும் பஸ்களில் ஏற முடியாது.

இதனால் அடுத்ததாக ஒரு நகர பேருந்துக்கு காத்திருந்து அவர் வத்தலக்குண்டு அருகே உள்ள லட்சுமிபுரத்திற்கு செல்வதற்குள் விசேஷம் முடிந்து விடும் நிலை ஏற்படுகிறது.
இதுபோல இரு கிராமங்களின் பெயரும் ஒன்றாக அதுவும் அடுத்தடுத்து ஒரே சாலையில் இருப்பதால் பல்வேறு பிரச்னைகள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண இரண்டு லட்சுமிபுரத்துக்கும் ஏதேனும் ஒரு வேறுபாட்டினை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. இதன்படி அவற்றின் அருகில் உள்ள ஏதேனும் பெரிய ஊரின் முதல் ஆங்கில எழுத்தை லட்சுமிபுரம் முன்பாக இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

வத்தலக்குண்டு அருகே உள்ள லட்சுமிபுரத்திற்கு வத்தலக்குண்டுவின் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது உள்ள முதல் எழுத்தான \”பி\” என்பதை இணைத்து பி.லட்சுமிபுரம் என்று மாற்ற வேண்டும்.

அதேபோல செம்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரத்திற்கு செம்பட்டியின் முதல் எழுத்தான \”எஸ்\” என்பதை இணைத்து எஸ்.லட்சுமிபுரம் என்றும் மாற்றலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பெயர் மாற்றத்தை அரசு ஆவணங்கள் ரீதியாக மேற்கொள்ளாவிட்டாலும், ஊரின் பெயரை குறிப்பிடும் பெயர் பலகைகளில் மட்டுமாவது உருவாக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த பிரச்னை குறித்து சமூக ஆர்வலர் சித்திக் கூறுகையில், லட்சுமிபுரம் பெயர் குழப்பத்தில் படித்தவர்களே சில நேரங்களில் தடுமாறி விடுகின்றனர். படிக்காத பாமர மக்கள் படும் அவதியை விளக்கிச்சொல்ல முடியாது. நீண்ட காலமாக நிலவி வரும் இந்த பிரச்னையை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கிராமங்களின் பெயர்களின் முன்பாக ஒரு ஆங்கில எழுத்தை சேர்ந்து அவர்கள் பெயர் பலகை அமைக்க வேண்டும். இது நடந்தால் நிச்சயம் இதுபோல் பெயர் குழப்பத்தில் மற்றொரு ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை நிச்சயமாக குறையும் என்றார்.

The post வத்தலக்குண்டு – செம்பட்டி சாலையில் 10 கி.மீ இடைவெளியில் இரு லட்சுமிபுரம் கிராமங்கள் appeared first on Dinakaran.

Tags : Lakshmipuram ,Vatthalakundu – Sempatti road ,Vatthalakundu ,Vatthalakundu – ,Sempatti road… ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...