×

நெல்லை அருகே தாராபுரத்தில் புதிய தார்சாலையில் உருவான பள்ளத்தால் விபத்து அபாயம்-விரைவில் சீரமைக்கப்படுமா?

நெல்லை : நெல்லை அருகே தச்சநல்லூர் தாராபுரத்தில் சமீபத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் உருவான பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதையடுத்து அதில் கம்பு நட்டியுள்ள அப்பகுதி மக்கள், இப்பள்ளத்தை விரைந்து சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். நெல்லை மாநகரில் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள சாலைகள் என பல இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன.

பல இடங்களில் இதுபோல் தோண்டப்பட்ட குழிகளில் மண் போட்டு மூடிவிட்டு, பல மாதங்களாக சாலைகள் சீர்செய்யப்படாமல் இருந்தது. இதனால் மழைக் காலங்களில் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நெல்லை மாநகரில் தச்சநல்லூர் அருகே தாராபுரம் முதல் மேலக்கரை வரையுள்ள பிரதான தார்சாலையில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மண்போட்டு மூடப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை போடப்பட்டது. அந்த புதிய தார் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதனால் விபத்துகளை தடுப்பதற்காக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதமாக அப்பள்ளத்தில் கம்பு ஒன்று நடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ‘‘தாராபுரம் முதல் மேலக்கரை வரையுள்ள சாலையில் பாதாள சாக்கடைத்திட்டப் பணிகளுக்காக குழிகள் தோண்டி, அதில் குழாய்கள் பதித்த பிறகு மண்ணை ேபாட்டு மூடிச் சென்றனர். பணிகள் முடிந்த பிறகும் பல மாதங்களாக இப்பகுதியில் சாலைகள் சீர்செய்யப்படாமல் இருந்தது. இதனால் மழை ேநரங்களில் மழைநீர் சாலையில் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாதபடி பெரிய பள்ளங்கள் ஏற்பட்டது. எனவே இப்பகுதியில் பல மாதங்களாக ஒரே பக்கமாக அனைத்து வாகனங்களும் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த சாலையின் வழியாக மதுரை, திருச்சி, சென்னை போன்ற வெளியூர்கள் மற்றும் தாழையூத்து, சங்கர்நகர், கங்கைகொண்டான் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நெல்லைக்கு செல்லும் பேருந்துகளும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களும் தினசரி செல்கிறது. இதுபோன்ற பிரதான சாலையை விரைந்து சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதேபோல் நெல்லை மாநகரில் பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகும் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாராபுரம் முதல் மேலக்கரை வரையுள்ள பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையில் ஒரு சில தினங்களிலேயே அதன் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன விபத்து ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து இதை தடுக்கும்பொருட்டு தற்காலிகாக அந்த பள்ளத்தில் கம்பு ஒன்று நட்டு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் ெசலுத்தி சாலையில் உருவான பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும். அத்துடன் இவ்வாறு பள்ளங்கள் ஏற்படாதவாறு தரமான முறையில் சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post நெல்லை அருகே தாராபுரத்தில் புதிய தார்சாலையில் உருவான பள்ளத்தால் விபத்து அபாயம்-விரைவில் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : New Tarsala ,Tarapuram ,Paddy ,Dachanallur Tarapuram ,Nelly ,Tar Road ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...