×

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து : 10 பேர் படுகாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் பழவேலி அருகே இன்று அதிகாலை சென்னை நோக்கி வந்த 4 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், வேனின் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில், ஜிஎஸ்டி நெடுஞ்சாலையை ஒட்டி, புறவழிச்சாலையில் எல்லையம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே அபாயகர சாலை வளைவு உள்ளது. இவ்வழியே செங்கல்பட்டு நகரப் பகுதிகளில் இருந்து வெளிவரும் வாகனங்கள் அபாயகர வளைவில் திரும்பி சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

இந்த அபாயகர சாலையில் உள்ளிருந்து வெளிவரும் வாகனங்களை, புறவழி சாலையில் செல்லும் வாகனங்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை. இதனால் புறவழி சாலையை ஒட்டிய அபாயகர வளைவில் அடிக்கடி வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டு அருகே பழவேலி, ஜிஎஸ்டி நெடுஞ்சாலையின் புறவழி சாலை பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் செங்கல்பட்டு நகருக்குள் இருந்து எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென சென்னை நோக்கிய பாதையில் அதிரடியாக திரும்பியது. அப்போது முன்னே சென்ற பயணிகள் வேனின் பின்பக்கத்தில் மணல் லாரி வேகமாக மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன், அதன் முன்னே சென்ற அரசு பேருந்து மீது மோதியது.

அப்பேருந்து அதன் முன்பாக சென்ற கார்மீது வேகமாக மோதியது. இதனால் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் இன்று அதிகாலை ஒரு லாரி, வேன், அரசு பேருந்து மற்றும் ஒரு கார் என அடுத்தடுத்து 4 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் பரபரப்பு நிலவியது. இவ்விபத்தில், பெரம்பலூரில் இருந்து ஒருவரை சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக வேனில் அழைத்துக் கொண்டு வந்த உறவினர்களின் வேனும் சிக்கியது. இதனால் வேனில் இருந்த நோயாளி உள்பட 10 உறவினர்களும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதில் லாரியை விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

வேனுக்குள் சிக்கியிருந்த 10 பேரையும் அரசு பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் சிக்கிய 4 வாகனங்களையும் அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக வலைவீசி தேடி வருகுின்றனர்.

The post செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து : 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chengalbatu GST Road ,Chengalpattu ,Chengalpattu GST highway ,Paveli ,Chennai ,Chengalputtu GST Road ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!