×

மியான்மரில் மையம் கொண்டு இருந்த தீவிர புயலான மோக்கா, புயலாக வலுவிழந்தது : இந்திய வானிலை ஆய்வு மையம்!!

மியான்மர் : வடக்கு மியான்மா் பகுதியில் மிக அதி தீவிர புயலாக கரையை கடந்த மோக்கா புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகா்ந்து புயலாக வலுவிழந்தது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் மியான்மரின் கியாக்பியு மற்றும் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் வழியாக புயல் கரையை கடக்கத் தொடங்கியது. சிட்வே துறைமுக நகரில் புயல் கரை கடந்த போது மணிக்கு 200 கிமீ வேகத்தில் சூறாவளியுடன் மழை பெய்தது. இதில் காக்ஸ் பஜார் மற்றும் செயின்ட் மார்ட்டின் தீவில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்ததாகவும், மரங்கள் வேரோடு சரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

புயலால் பலர் காயமடைந்திருப்பதாக செயின்ட் மார்ட்டின் தீவின் நிர்வாக தலைவர் முஜிபுர் ரஹ்மான் கூறி உள்ளார்புயல் காரணமாக வங்கதேசத்தில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. ரோஹிங்கியா முஸ்லிம்கள் முகாம் உள்ள பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐநா எச்சரித்ததைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் மோக்கா புயல் மியான்மா் பகுதியில் இருந்து வடக்கு – வடகிழக்கு நோக்கி நகா்ந்து புயலாக வலுவிழந்தது.அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post மியான்மரில் மையம் கொண்டு இருந்த தீவிர புயலான மோக்கா, புயலாக வலுவிழந்தது : இந்திய வானிலை ஆய்வு மையம்!! appeared first on Dinakaran.

Tags : Mocha ,Myanmar ,Indian ,Meteorological Centre ,Moka ,northern Myanmar ,Indian Meteorology ,
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்