×

தேனூரில் விழிப்புணர்வு முகாம் பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் நண்பனாக நடந்து கொள்ளுங்கள்

பாடாலூர்: பாடாலூர் அருகே தேனூர் கிராமத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பேசிய எஸ்பி பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் நண்பனாக நடந்து கொள்ளுங்கள் என்றார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா போன்றவற்றை பயன்படுத்துவதை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து எஸ்பி ஷ்யாம்ளா தேவி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்டு எஸ்பி பேசுகையில், கோடைக் காலத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றிய நிலையில் இருக்கும். இதனால் தங்களது குழந்தைகளை ஏரி குளம் கிணறு போன்ற நீர் நிலைகளில் தனியாக குளிக்க அனுப்பி வைக்க வேண்டாம்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோடைக் கால விடுமுறையில் பயனுள்ள வகையில் ஏதேனும் குறுங்கால பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி வையுங்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் ஒரு நண்பனாக நடந்து கொள்ளுங்கள் மேலும் அவர்களிடம் அன்றாடம் என்ன நடந்தது என கலந்துரையாடுங்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாங்கள் தான் முதல் ஆசிரியர்கள் அவர்கள் முன்பு ஆரோக்கியமான சொற்றொடர்களை பேசுங்கள், சமூக வலைதளத்தினை பயன்படுத்தும் போது ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து எடுத்து கூறுங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் ஏதேனும் நடைப்பெற்றால் 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். பெரம்பலூர் மாவட்டம் குற்றமில்லாத மாவட்டமாக திகழ பொதுமக்களாகிய தாங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் போதை பழக்கங்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்க வேண்டும். இதில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி பாடாலூர் காவல் ஆய்வாளர் கலா (பொ) உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

The post தேனூரில் விழிப்புணர்வு முகாம் பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் நண்பனாக நடந்து கொள்ளுங்கள் appeared first on Dinakaran.

Tags : Camp ,Thenur ,Badalur ,
× RELATED பாடாலூர் அருகே விபத்து பைக் மீது கார் மோதல்: பெண் பலி