×

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேசியகொடி, புத்தகம் பரிசு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழங்கினார்

கண்ணமங்கலம், மே 14: வேலூர் அடுத்த கம்மவான்பேட்டை கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேசிய கொடி மற்றும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.வேலூர் அடுத்த கம்மவான்பேட்டை கிராமத்தில் இந்தியா பாகிஸ்தான் போரும் விளைவும் என்கிற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கண்ணமங்கலம் முப்படை நலச்சங்க தலைவர் கேப்டன் லோகநாதன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜி.ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர்கள் பாலகுமார், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் எல்.ஏழுமலை வரவேற்றார்.

இதில், பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராணுவ வீரர்கள் பணிக்காலத்தில் ஏற்பட்ட போர் அனுபவங்கள் மற்றும் பணி நிறைவுக்கு பின் இன்றைய வாழ்வியல் முறை, தேவையான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். அப்போது ராணுவ வீரர்களிடம் இந்த சந்திப்பு உணர்வு பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர், தேசிய கொடியையும், இந்தியா பாகிஸ்தான் போரும் விளைவும் மற்றும் இரண்டு வரி காவியம் என்கிற புதுமையான திருக்குறள் தெளிவுரை புத்தகங்களையும் ராணுவ வீரர்களுக்கு பரிசாக வழங்கினார். அவருக்கு இந்திய அரசு சின்னமான அசோக ஸ்தூபியை நினைவு பரிசாக ராணுவ வீரர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சுப்பிரமணி, ஜெயக்குமார் மற்றும் ராணுவ பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேசியகொடி, புத்தகம் பரிசு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Pattukottai Prabhakar ,Kannamangalam ,Kammawanpettai ,Vellore ,Dinakaran ,
× RELATED அண்ணன் தலைமீது கல்லை போட்டு கொன்ற...