பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனல் பறந்தது. உண்மையில் இந்த தேர்தல் பாஜவுக்கும், காங்கிரசுக்கும் வாழ்வா, சாவா தேர்தல்தான் என்றே சொல்லலாம். கர்நாடகாவை எந்த விதத்திலும் விட்டுவிட கூடாது என்பதில் இரு கட்சிகளும் தீவிரம் காட்டின. கர்நாடக பாஜவை பொறுத்தவரை கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடியூரப்பா – பசவராஜ் பொம்மை என இரு தரப்பாக பிரிந்து கிடந்தது பாஜவுக்கு பெரிய பலவீனமாக இருந்தது. லஞ்சம், ஊழல் அதிகளவில் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை நன்றாக புரிந்து கொண்ட காங்கிரஸ் 40 சதவீத கமிஷன் சர்க்கார் என்று பிரசார கோஷத்தை முன்வைத்தது. அதே போல் பிரதமர் மோடியை பா.ஜ முன்னிறுத்தியது. உள்ளூர் செல்வாக்கு மிக்க தலைவர் எடியூரப்பாவை கைவிட்டது. ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் முகாமிற்கு வந்தார்.
இதையடுத்து பாஜ, இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டுமெனில் ஜாதி அஸ்திரத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைமைக்கு வந்தது. கர்நாடகாவை பொறுத்தவரை, அவற்றில் முக்கியமானவை லிங்காயத்து, ஒக்கலிகா ஜாதிகள். இந்த இரு சமூக மக்களை கவரும் முயற்சியில் பாஜ இறங்கியது. அதன் ஒருகட்டமாகவே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகங்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளது பாஜ அரசு. இது, அக்கட்சிக்கு கட்டாயம் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்த்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத காங்கிரஸ் வேறு ஆயுதத்தை கையில் எடுத்தது. அதாவது, மத அரசியலை கையில் எடுத்தது. ஹிஜாப் விவகாரம், இட ஒதுக்கீடு ரத்து போன்ற நடவடிக்கைகளால் பாஜ மீது முஸ்லிம்கள் பெரிய அளவில் அதிருப்தியடைந்தனர். மேலும், கிறிஸ்தவர்களும் பாஜவுக்கு எதிரான மனநிலையில் இருந்தனர்.
எனவே, சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வியூகத்தை காங்கிரஸ் வகுத்தது. அதேபோல, தலித் மற்றும் பழங்குடியினரை கவரும் முயற்சியிலும் அக்கட்சி இறங்கியது. பாஜ எவ்வளவுதான் முயன்றாலும் ஒக்கலிகா, லிங்காயத்து சமூக வாக்குகளை மொத்தமாக பெறுவது சாத்தியம் இல்லாதது. ஏனெனில் அந்த சமூகங்களில் காங்கிரசுக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தனர். அதற்கேற்றார்போல் அவர்களும் ஆதரவு அளித்ததால் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த பயனும் கிடைத்தது. அதன் காரணமாக காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி கட்டிலில் அமர உள்ளது.
The post எடுபட்ட 40 சதவீத கமிஷன் சர்க்கார் கோஷம் ஜாதி அரசியலால் வெற்றியை இழந்த பாஜ: உள்ளூர் தலைவர்களை மதிக்காததால் கர்நாடகா கைவிட்டது appeared first on Dinakaran.