×

ஆண் வேடமிட்டு மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஆண்போல வேடமிட்டு இரும்புக் கம்பியால் மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் ஆறாலும்மூடு பகுதியை சேர்ந்தவர் வாசந்தி (63). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் ரதீஷ். அவரது மனைவி சுகன்யா (27). அனைவரும் வாசந்தியுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். வாசந்தி தனது வீட்டில் பசுக்களை வளர்த்து வருகிறார். தினமும் காலையில் பால் கறந்துவிட்டு அதனை அருகிலுள்ள கூட்டுறவு சங்கத்தில் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் வாசந்தி கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம் போல கூட்டுறவு சங்கத்தில் பாலை கொடுத்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டிப் டாப் உடையுடன் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் வாசந்தியை சரமாரியாக தாக்கினார்.

இதில் வாசந்திக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வாசந்தியின் கூக்குரலைக் கேட்டு அப்பகுதியினர் விரைந்து வந்தனர். இதனால் வாசந்தியை தாக்கிய நபர் அங்கிருந்து ஓட்டம்பிடித்தார். இதையடுத்து வாசந்தி மீட்கப்பட்டு நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பாலராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தாக்குவதற்கு பயன்படுத்திய இரும்புக் கம்பியை வாசந்தியின் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றிலிருந்து போலீசார் கண்டெடுத்தனர். இது முக்கிய தடயமாக அமைந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வாசந்தியை தாக்கியது அவரது இரண்டாவது மருமகள் சுகன்யா என தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் சுகன்யாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஆண் வேடமிட்டு வாசந்தியை தாக்கியதாக கூறினார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலம்: எனது கணவர் ரதீஷ் தினமும் அவரது தாயின் பேச்சைக் கேட்டு என்னை அடித்து துன்புறுத்துவார். இதனால் எனக்கு மாமியார் வாசந்தி மீது ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது அவரை பழிவாங்க திட்டமிட்டேன். இதனால் சம்பவத்தன்று என்னுடைய கணவனின் பேன்ட், சட்டையை அணிந்து கொண்டு ஆண் போல வேடமிட்டு முகமூடி அணிந்துகொண்டு வாசந்தியை தாக்கினேன். பின்னர் தாக்குதலுக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியை அருகே உள்ள கிணற்றுக்குள் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். பின்பு எதுவும் தெரியாததுபோல் இருந்தேன். ஆனால் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின் போலீசார் சுகன்யாவை நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆண் வேடமிட்டு மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala State ,
× RELATED குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி!!