×

திண்டுக்கல் அருகே தொழிற்சாலை கழிவுகளால் நிறம் மாறிய குடகனாறு-தொற்று அபாயத்தில் மக்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலப்பதால் குடகனாற்றில் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.கொடைக்கானல் கீழ்மலை பகுதியான புல்லாவெளியில் தோன்றும் குடகனாறு, திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர் வழியாக கரூர் மாவட்டம் வரை செல்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழை காரணமாக குடகனாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி நீர் தேக்கத்தில் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள அகரம் வழியாக செல்லும் குடகனாற்றில் வரும் தண்ணீர் கடந்த இரண்டு நாட்களாக பச்சை நிறத்தில் வருகிறது. மேலும் அதிகமான நுரை பொங்கி தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குடனாறு பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக கலெக்டர், வேடசந்தூர் வட்டாட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் ராமசாமி கூறும்போது, திண்டுக்கல் பகுதி கழிவுநீர், தனியார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் குடகனாற்றில் கலப்பதால் தண்ணீரின் நிறம் பச்சையாக மாறி, நுரை பொங்கி வருவதுடன் துர்நாற்றம் வீசுகிறது.

மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வரும் வேளையில் தனியார் நிறுவனங்கள் கழிவுநீரை வெளியேற்றி விடுகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமலும், கால்நடைகள் குடிக்க முடியாமலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post திண்டுக்கல் அருகே தொழிற்சாலை கழிவுகளால் நிறம் மாறிய குடகனாறு-தொற்று அபாயத்தில் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Dintugul ,Dindugul ,Sundaganadi ,Thintugul ,Dinakaran ,
× RELATED வாங்க ஆள் இல்லாததால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்