×

ஊரக வளர்ச்சித்துறை மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு-விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நிறைமதி மற்றும் நீலமங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் நிறைமதி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.3.13 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலகத்தினையும், ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28.90 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள பள்ளி சுற்றுச்சுவர் பணியையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது பள்ளி முழுவதும் சுற்றுச்சுவர் கட்டுமான பணியை விரைந்து முடித்திடுமாறு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நீலமங்கலம் கிராமத்தில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் ரூ.25.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வருவதை ஆட்சியர் ஆய்வு செய்து பள்ளி கட்டிட பணிகளை கோடை காலத்திற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வாருங்கள் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமார், ஊரக வளர்ச்சி முகமை உதவி கோட்டப் பொறியாளர் பரமானந்தம், கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெய்சங்கர், செல்வி பச்சமுத்து மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ஊரக வளர்ச்சித்துறை மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு-விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rural Development Department ,Kallakurichi ,Rural Development and ,Panchayat Department ,Niraimati ,Neelamangalam ,Kallakurichi Panchayat Union ,District ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் அருகே மூங்கில்...