×

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு விவசாயிகளிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

திருக்கழுக்குன்றம், மே 13: திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் மற்றும் கீரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் விவசாயம் குறித்த தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் விவசாயிகளிடம் குழு படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து திருக்கழுக்குன்றம் மங்கலம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு பண்டக சாலையின் குடோனை பார்வையிட்டு அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் கூறுகையில், ‘தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அந்தந்த துறைகளின் அதிகாரிகள் களப்பணி மேற்கொள்ள வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவையடுத்து நானும் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி குறைய துவங்கியுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் நெல் சாகுபடி நடந்து கொண்டிருக்கிறது. இப்பகுதியில், உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளின் குறைகளை கேட்கிறோம். திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை சேமித்துவைக்க நிரந்தர குடோன்கள் வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர். கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் விரைவில் குடோன் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ஆய்வின்போது, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, திருக்கழுக்குன்றம் வட்ட வழங்கல் அலுவலர் முருகன், ஒரகடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், புல்லேரி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு விவசாயிகளிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Radhakrishnan ,Thirukkalukkunram ,Oragadam ,Keerapakkam ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை