×

15 நாட்களுக்குள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி, மே 13: புலியூர் அடுத்த பாரூர் ஏரிக்கரை சாலையில் 15 தினங்களுக்குள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இதில், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர், டிஆர்ஓ ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு மற்றும் துணை கலெக்டர்கள், டிஎஸ்பிக்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் குறித்து கலெக்டர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18 நபர்கள் சாலை விபத்துகளில் ஹெல்மெட் இன்றி வாகனம் இயக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து ₹9 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியவர்களிடம் ₹25 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னேப்பள்ளி வளைவில் சாலை வளைவாக அமைந்துள்ளதால் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சின்னேப்பள்ளி வளையில், மெதுவாக செல்ல ஏதுவாக எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலை நொகனூர் காலனி அருகே வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் சோக்காடி பஸ் நிறுத்தம் அருகே, சாலை சந்திப்பில் அதிக விபத்துகள் நடைபெறுவதால், எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டதையடுத்து, சோக்காடி சாலை பிரியும் இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

புலியூர் அடுத்த பாரூர் ஏரிக்கரை சாலையில் கனரக வாகன ஓட்டிகள் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்று விபத்துக்கள் ஏற்படுத்துவதால், வாகனங்களின் வேகத்தினை குறைக்கும் பொருட்டு உயரம் குறைவான வேகத்தடை அமைக்க நிர்வாக ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரும் நிலையில் உள்ளது. 15 தினங்களுக்குள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சரியாக எரியாமல் உள்ள மின் விளக்குகளின் தொழில்நுட்ப கோளாறுகள் வரும் ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் சரிசெய்யப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post 15 நாட்களுக்குள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Parur ,Puliyur ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...