×

தொண்டர்கள் கிடைக்காததால் போஸ்டரில் அரசியல் நடத்தும் குக்கர் கட்சியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘தேனிக்காரர் பேரை கேட்டதும் கொதிச்சாங்களாமே மாஜிக்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி நகரில் உள்ள இலைக்கட்சி பொதுச்செயலாளர் தனது வீட்டில் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடினாராம். மாஜி அமைச்சர்கள் எல்லாம் பரிசு பொருட்களோடு படையெடுத்து வந்து, பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி அசத்திட்டாங்களாம். ஒவ்வொருத்தரும் வித்தியாசமாக செய்கிறேன் என்ற பெயரில் மலர் மாலை, பழ மாலை, பண மாலை எனவும், பல சாமிகளின் சிலைகளையும் கொடுத்தாங்களாம். இப்படி, பொதுச்செயலாளரை மனம் குளிர செய்த மாஜிக்கள், வெளியே வந்ததும் தேனிக்காரர் பற்றி காட்டமாக பேட்டிக்கொடுத்து கொதிச்சிட்டாங்களாம். பூஜ்ஜியங்கள் சேர்ந்து ராஜ்ஜியமாகாது, பியூஸ் போனவர்களின் சந்திப்பு, இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை பற்றி பேசி என்ன பிரயோஜனம் என்றெல்லாம் பொங்கிட்டாங்களாம். இதை பார்த்த உள்ளூரு இலைக்கட்சிக்காரங்க, நம்ம அண்ணணோட கொடி எட்டுத்திக்கும் பறக்குது, அதனால தான் எல்லா மாஜிக்களும் அண்ணன் பின்னாடி வரிசைக்கட்டி நிக்கிறாங்கனு பெருமைபட பேசிச் சென்றார்களாம். இது ஒருபுறமிருக்க பிறந்தநாள் விழாவா, அல்லது தேனியையும், குக்கரையும் வறுத்தெடுக்கும் விழாவா என்று குழம்பியவர்களுக்கும் பஞ்சமில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போஸ்டரில் அரசியல் செய்யும் வேலைய ஆரம்பிச்சிருக்கே குக்கர் கட்சி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அரசியல் கட்சி என்றாலே பொதுக்கூட்டம், போராட்டங்கனு நடத்துவதற்கு தொண்டர்கள் தான் மிக முக்கியம். தொண்டர்கள் இல்லையென்றால், ஆளில்லாத கடையில, யாருக்கு சார் டீ ஆத்துறீங்கன்னு ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. அப்படி கேள்வி கேட்கக்கூடிய நிலைமையில குக்கர் கட்சி இருக்குது. அந்த கட்சியில இருந்த நிர்வாகிங்க பலரும், இப்ப கட்சி விட்டு மாற்று கட்சிகளில் ஐக்கியமாகி வர்றாங்களாம்.
குறிப்பாக வெயிலூர் மாவட்டத்துல குக்கர் கட்சியில நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் இருக்கும் இடம் தெரியாம இருக்காங்களாம். இதனால் வெயிலூர் மாநகர்ல குக்கர் கட்சியில இருக்குற நிர்வாகிங்க, நாங்களும் கரண்ட்ல தான் இருக்கிறோம்னு காட்டி கொள்ள, அவங்களே காசு கொடுத்து, வித விதமா போஸ்டர் அடிச்சு பந்தா காட்டி வர்றாங்களாம். கூட்டம் நடத்தினா? 10 பேர் கூட வர்றதில்லையாம். பேனர்ல மட்டும் 20, 30 நபர்களோட பெயர்களையும், படங்களையும் வரிசை கட்டி போட்டுவிடுறாங்களேன்னு, போஸ்டர பாக்குற ஜனங்க சிரிச்சு பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பால் திருடிய பெருச்சாளி கையும் களவுமாக சிக்கிருச்சாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல சத்தான ஏரியாவுல பால் நிலையம் இயங்கி வருது. இந்த நிலையத்துல இருந்து தினமும் 1 லட்சம் லிட்டர் பால்பாக்கெட்டுகள் தயார்செஞ்சி வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர் பத்தூர்னு பல்வேறு மாவட்டங்கள்ல இருக்குற பப்ளிக்கிற்கும், ஏஜென்டுகளுக்கும் வேன் மூலமாக பால் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கிறாங்க. இப்படி அனுப்பும்போது, பால் பாக்கெட்டுகளை கூடுதலாக திருடிக்கிட்டு போறதாக புகார்கள் வந்திருக்குது.
இதனால அதிகாரிங்க அடிக்கடி செக்கிங் செஞ்சிருக்காங்க. 2 நாளைக்கு முன்னாடி ஜென்ரல் மேனேஜர் செக்கிங் நடத்தியிருக்காரு. அதுல ஒரு வேன்ல நிர்ணயிச்ச அளவை விட கூடுதலாக பால்பாக்கெட்டுகளை திருடிக்கிட்டு போறது தெரிஞ்சு, கையும் களவுமாக பிடிச்சிருக்காங்க. பால் திருட்டு வேலைய பெருச்சாளிகள் எத்தனை நாளாக செஞ்சிக்கிட்டு வர்றாங்கன்னு விசாரணை ஓடிக்கிட்டிருக்குதாம். அதுமட்டுமில்லாம, இந்த விவகாரத்துல பல எலிகள் சிக்கக்கூடும்னு பால் நிறுவனத்துல பரபரப்பாக பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி அமைச்சர் மணியானவர் ஓரங்கப்பட்டப்படுவதால் சேலத்துக்காரரின் பிறந்த நாளை புறக்கணிச்சாங்களாமே ஆதரவாளர்கள்’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில் தேனிக்காரர், சேலத்துக்காரர் என 2 அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த 2 அணிகளிலும் மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளனர். கடலோர மாவட்ட மாஜி அமைச்சர் மணியானவர் சேலத்துக்காரர் அணியில் இருந்து வருகிறார். இந்த அணியில் இருந்து வந்தாலும் தேனிக்காரருக்கு எதிரா பெரிய அளவில் ரியாக்‌ஷன் எடுக்காமல் மணியானவர் இருந்து வருகிறார். தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணியில் ஐக்கியமாகி உள்ள மாஜி அமைச்சருக்கு, சேலத்துக்காரர் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார். முக்கியமா, அவருக்கு கடலோர மாவட்டத்தில் முக்கிய பொறுப்பு கூட வழங்கப்பட உள்ளது. இந்த தகவல் வெளியே கசிந்ததால் மணியானவரின் ஆதரவாளர்கள் சேலத்துக்காரர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியில் மணியானவரை ஓரங்கட்டவே ஐக்கியமாகி உள்ள மாஜி அமைச்சருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. இதனாலேயே சேலத்துக்காரரின் பிறந்த நாளை கொண்டாடாமல் மணியானவரின் ஆதரவாளர்கள் புறக்கணித்து விட்டதாக இலைகட்சிக்குளே அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

The post தொண்டர்கள் கிடைக்காததால் போஸ்டரில் அரசியல் நடத்தும் குக்கர் கட்சியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Peter ,General Secretary ,Lilakshi ,Mangani Nagar ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...