×

ஆனித்தேரோட்ட திருவிழா நெல்லையப்பர் கோயில் பந்தகால் நடும் வைபவம்

நெல்லை:நெல்லையப்பர் கோயிலில் ஆனித்தேரோட்ட திருவிழாவையொட்டி இன்று காலையில் கோயிலில் பந்த கால் நடும் வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென் மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் வரலாற்று பிரசித்தி பெற்றது நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும் ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா பந்தகால் நடும் வைபவம் இன்று காலையில் நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு காலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பந்தகாலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு காந்திமதி யானை முன் செல்ல பந்தகால் ரதவீதி வலம் எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி கோயில் வாசல் மண்டபம் அருகே நடப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து டவுன் புட்டாரத்தி அம்மன் கோயில் திருவிழா வரும் 21ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. இதையடுத்து நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழாவில் விநாயகர் கொடியேற்றம் ஜூன் 6ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் ஜூன் 24ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து ஆனித்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் உள்பட 5 தேர்கள் வலம் வரும் நிகழ்ச்சி ஜூலை 2ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது.

The post ஆனித்தேரோட்ட திருவிழா நெல்லையப்பர் கோயில் பந்தகால் நடும் வைபவம் appeared first on Dinakaran.

Tags : Anitherotta Festival Nellayapar Temple Pandakal Planting Vaibhavam ,Nellai ,Anitherotta festival ,Nellaiyapar ,Anitherotta Festival Nellayapar Temple Pandakal Natum Vaibhavam ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு