×

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மோக்கா தீவிர புயல், மிக தீவிர புயலாக மாறியது!!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மோக்கா தீவிர புயல், மிக தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை கடக்கக்கூடும் என்றும் மிக தீவிர புயலாக கரையை கடக்கும்போது, காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 160 கி.மீ வேகத்திலும், இடையிடையே 175 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

இதனிடையே வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல், போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு, தென்மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.முன்னதாக தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயலின் வேகம் மணிக்கு 11 கி.மீ-ல் இருந்து 7 கி.மீ ஆக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

The post வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மோக்கா தீவிர புயல், மிக தீவிர புயலாக மாறியது!! appeared first on Dinakaran.

Tags : Moka ,Bengal Sea ,Chennai ,southeastern Bengal ,central Bengal region ,Moka Serious Storm ,
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!