ஒட்டன்சத்திரம். மே 12: ஒட்டன்சத்திரத்தில் நடைபெறும் மேம்பால பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் – கோயம்புத்தூர் – திம்மம் – பெங்களூரு சாலையில் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்த கான்கிரீட் மேல் தள பகுதியை சரிசெய்ய வேண்டிய நிலை உருவானது. இதனால் பாலத்தின் மேல் செல்லும் இருவழிப்பாதையை கடந்த மார்ச் 17ம் தேதி முதல் சுமார் 20 நாட்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல், செம்பட்டி மார்க்கத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் லெக்கையன்கோட்டை சந்திப்பில் இருந்து ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை, வேடசந்தூர் சாலை வழியாக அத்திக்கோம்பை, செக்போஸ்ட் சென்று ஒட்டன்சத்திரம் நகருக்குள் செல்ல வேண்டுமென நெடுஞ்சாலை துறையினர் அறிவித்தனர்.
இப்பணிகள் 20 நாட்களுக்குள் முடிவடையும் என்று அறிவித்ததால் லெக்கையன்கோட்டை வழியாக பேருந்துகள் சென்று வந்தன. ஆனால் இரவு நேரங்களில் ஓட்டுனர்கள் பாதை தெரியாமல் தாராபுரம் மற்றும் பழநி சாலை வழியாக மாறிச் சென்று விடுவதால் ஒட்டன்சத்திரத்தில் இறங்க வேண்டிய பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து கீழே செல்லும் நபர்கள் மீது விழுந்து உயிர் பலி ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே மெதுவாக நடைபெறும் பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஒட்டன்சத்திரத்தில் மேம்பால பராமரிப்பு பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.