×

திருவண்ணாமலையில் பிரமாண்ட ஏற்பாடு

திருவண்ணாமலை, மே 12: திருவண்ணாமலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொதுவாழ்வு பயண புகைப்பட கண்காட்சியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடிகர் ஜெயம் ரவி திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பொதுவாழ்வு பயண புகைப்பட கண்காட்சி சென்னை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலை மைதானத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிரமாண்ட அரங்கத்தில் நேற்று தொடங்கியது.

இந்த புகைப்பட கண்காட்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலைமுறையினர் முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல்வரின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், மேற்கொண்ட போராட்டங்கள், சந்தித்த சவால்கள், சிறை வாழ்க்கை துயரங்கள் ஆகியவற்றை அரிய பல புகைப்படங்கள் மற்றும் இயல்பான சிற்ப காட்சி வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. தூய்மை அருணை இயக்கம் சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுவாழ்வு பயண புகைப்பட கண்காட்சி அரங்கத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வரின் பொதுவாழ்வு பயண புகைப்பட கண்காட்சி அரங்கத்தை, திரைப்பட நடிகர் ஜெயம் ரவி திறந்து வைத்து பார்வையிட்டார். அரங்கம் முழுவதையும் பார்வையிட்டு நெகிழ்ச்சி அடைந்த அவர், அங்கிருந்த பார்வையாளர்கள் குறிப்பேட்டில் தமது கருத்துக்களை பதிவிட்டு கையெழுத்திட்டார்.

அதில், முதல்வரின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் வாய்ப்புக்காக எனது இதயப்பூர்வமான நன்றி. முதல்வருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டுக்கும், சென்னைக்கும் அவர் ஆற்றிய பணிகளையும், உழைப்பையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. அவர், தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றிட விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

திருவண்ணாமலைக்கு ஏற்கனவே பலமுறை வந்திருக்கிறேன். இந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தது மகிழ்ச்சி. இதனை சிறப்பாக கொண்டுவந்ததற்கு நன்றி. இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை. ஒரு வரலாற்றை ஒரு திரைப்படம் போல நம் கண்முன்பே கொண்டுவந்து காட்டியுள்ளனர். ஒரு சகாப்தத்தை நம் கண் முன்பு காட்டியுள்ளனர். முதல்வராகும் முன்பே மேயராக இருந்த காலத்தில் அவர் ஆற்றிய பணிகள், முதல்வராக அவரது சாதனைகள், நட்பை எப்படி போற்றி பாதுகாத்திருக்கிறார் என்பதை எல்லாம் காட்சிபடுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மக்களுடைய வரவேற்பும், அன்பும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் வர வேண்டும் என தோன்றுகிறது. நாமே வரவேண்டும் என நினைத்தாலும் இங்கு வர முடியாது, ஒரு அழைப்பு இருந்தால் மட்டுமே இங்கு வர முடியும்.

இந்த ஆட்சியின் சிறப்புகள் அனைவருக்கும் தெரியும். என்னென்ன நல்லவிதமான மாற்றங்கள் நடந்திருக்கிறது என தெரியும். இன்னும் நல்ல பல மாற்றங்கள் நடைபெற வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தரன், பா.கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன், துரை.வெங்கட், டிஆர்ஓ பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத்தலைவர் சு.ராஜாங்கம், குட்டி புகழேந்தி, டிவிஎம் நேரு, ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர் சரவணன் மற்றும் வியாபாரிகள் சங்கம், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலையில் பிரமாண்ட ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Chief Minister ,M.K.Stalin ,Public Works ,Minister ,AV Velu ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி